– மீள் திருத்த விண்ணப்பம் ஒக். 01 – 15 வரை
2023 (2024) க.பொ.த. பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வௌியாகியுள்ளது.
பரீட்சை பெறுபேறுகள பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் results.gov.lk இணையத்தளங்கள் ஊடாக பெற்றுக் கொள்ளலாம் என, பரீட்சைகள்ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமிர் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 535 இணைப்பு நிலையங்களின் ஊடாக 3,527 பரீட்சை நிலையங்களில் 452,979 பரீட்சார்த்திகள் இப்பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
இவர்களில் 387,648 பாடசாலை பரீட்சார்த்திகளும் 65,331 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் உள்ளடங்குகின்றனர்.
இப்பரீட்சை தொடர்பான மீள்பரிசீலனைக்கான விடைத்தாள்களை மீள் திருத்தம் பணிக்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் 01 முதல் 15 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அனைத்து பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களும் onlineexams.gov.lk/eic இல் Personal Account Login என்ற இணைப்பிற்குச் சென்று தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்ய அல்லது பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.
தரவிறக்கம் செய்யப்பட்ட அச்சுப்பிரதிகள் க.பொ.த. உயர் தர வகுப்புகளில் சேர்வதற்கான செல்லுபடியாகும் ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுமென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து அதிபர்களும் அந்தந்த பாடசாலைகளின் பரீட்சை பெறுபேறு ஆவணத்தை பதிவிறக்கம் செய்ய, onlineexams.gov.lk/eic இல் School Account Login என்ற இணைப்பிற்குச் சென்று, ஏற்கனவே விண்ணப்பங்களை அனுப்ப கொடுக்கப்பட்ட பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி அச்சிடப்பட்ட பெறுபேறுகளை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்களும், வலயப் பணிப்பாளர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, onlineexams.gov.lk/onlineapps இல் Exam Result Sheets என்ற இணைப்பைப் பயன்படுத்தி, தங்கள் மாகாணம்/வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளினதும் பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்ய/பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.
அச்சிடப்பட்ட மூலப்பிரதிகள், மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியிடப்பட்ட பின்னர் அதிபர்கள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச பயன்பாட்டிற்காக பெறுபேறு சான்றிதழ்களை பெறுவதற்கு ஒக்டோபர் 01ஆம் திகதி ஒன்லைன் மூலம் விண்ணப்பிகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெறுபேறுகள் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற பின்வரும் தொடர்பு இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- நேரடி அழைப்பு இலக்கம் 1911
- பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு, பெறுபேறுகள் கிளை: 011 2784 537, 011 2784 208, 011 2786 616, 011 2785 922
- தொலைநகல்: 0112784422