இருபது வருடமாக முஸ்லிம் சமூகத்தை தேர்தலுக்கு மட்டும் பயன்படுத்தி எந்த உரிமையையும் பெற்றுத்தராத சமூகத்தை ஏமாற்றும் முஸ்லிம் கட்சிகளை முஸ்லிம்கள் ஒன்று பட்டு நிராகரிக்காத வரை முஸ்லிம் சமூகம் அரசியலில் வெற்றிபெற முடியாது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஒரு உறையில் இரண்டு வாள்கள் இருப்பது தவறு என ரிசாத் பதியுதீனுக்கு பகிரங்கமாக சொன்னோம். ஹக்கீம் இருக்கும் பக்கம் இருப்பது பிழை என்றும் அரசியல் சாணக்கியம் பற்றிய அறியாமை என்றும் சொன்னோம்.
இப்போது இரண்டு பெரிய முஸ்லிம் கட்சிகள் ஆதரித்தும் சஜித் பிரேமதாச தோற்றதன் மூலம் இந்த இரு ஏமாற்று கட்சிகளும் இருக்கும் பக்கத்தை ஆதரிப்பதில்லை என்ற சிங்கள மக்களின் முடிவு தெளிவாகியுள்ளது. இதையே கடந்த 2019 தேர்தலிலும் காட்டினர்.
அதிலும் தமிழ் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கிறதோ அவர் படுதோல்வி அடைவார் என்பதும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழ் கூட்டமைப்புடன் சஜித் பிரேமதாச இணைந்தது மிகப்பெரிய தவறு.2010ம் ஆண்டு தேர்தலில் சம்பந்தன் சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவு தெரிவித்த போது அடித்துச்சொன்னேன் மஹிந்தவின் வெற்றி உறுதியாகிவிட்டது என.
அத்தேர்தலில் ஆடையின்றி நிற்கும் முஸ்லிம் சமூகத்துக்குரிய கோவணம் சரத் பொன்சேக்கா என ஹக்கீம் கூறினார். பின்னர் கோவனத்தையும் இழந்து நின்றார்.
ஆகவே இருபது வருடமாக முஸ்லிம் சமூகத்தை தேர்தலுக்கு மட்டும் பயன்படுத்தும் சமூகத்தை ஏமாற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அ.இ. மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகளை முஸ்லிம்கள் ஒன்று பட்டு நிராகரிக்காத வரை முஸ்லிம் சமூகம் அரசியலில் வெற்றிபெற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.