ஜனாதிபதி தேர்தலில் அநுரவின் வெற்றியை இந்நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ள தருணமிது. அந்த மகிழ்ச்சியில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியும் இணைந்து கொள்வதாக அக்கட்சியின் தலைவர் என். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
தமது கட்சியான புதிய ஜனநாயக மக்கள் முன்னணி பொது வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தாலும் கூட மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்திருக்கின்றார்கள்.
எனவே முழு நாட்டு மக்களினதும் விருப்புடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இணைந்து செயற்பட நாங்கள் தயாராகவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
நாட்டில் இதுவரை காலமும் இடம்பெற்ற ஊழல் துஷ்பிரயோகம் நேர்மையற்ற அரசியல்வாதிகளின் நடத்தை காரணமாகவே இந்த தடவை மக்கள் தெளிவாக வாக்களித்துள்ளனர். அநுரவின் விடாமுயற்சி காரணமாகவே இந்த வெற்றியை பெற்றுள்ளார்.
இனி எதிர்வரும் காலங்களில் ஊழலற்ற ஒரு நாட்டை அவர் கட்டியெழுப்புவார் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது.
சிறுபான்மை மக்களுக்காக அவர் செயற்படுவார் என்றும் எதிர்பார்க்கின்றோம். அதேபோல் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு முதலிடம் கொடுப்பார் என்ற நம்பிக்கையும் எமக்கு உள்ளது.
வடகிழக்கு மக்களின் அரசியல் தீர்வுக்கும் நிரந்தர தீர்வை வழங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. சிறுபான்மை மக்கள் தொடர்பில் அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கின்றோம்.
இதனைத் தொடர்ந்து வரப்போகும் பொதுத் தேர்தலில் அவருக்கு எமது மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். மாற்றம் என்பது நாட்டுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் தேவைப்படுகிறது. கடந்த காலங்களில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பாக செயற்படாமல் போனார்கள். கடந்த கால கசப்புகளை மறந்து புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம் என அவர் தெரிவித்தார்.