இந்தியா முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மேம்படுத்தவென 10 ஆயிரத்து 900 கோடி ரூபா செலவில் பாரிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு இந்திய மத்திய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 24 இலட்சத்து 79 ஆயிரம் மின்சார இரு சக்கர வண்டிகளுக்கும் 3 இலடசத்து 16 ஆயிரம் மின்சார முச்சக்கர வண்டிகளுக்கும் 14 ஆயிரத்து 28 மின்சார கார்களுக்கும் 88 ஆயிரத்து 500 மின்சார வாகன சார்ஜிங்க் தளங்களுக்கும் ஒத்துழைப்பு நல்கப்பட உள்ளது.
இத்திட்டத்தை வாகனங்கள் உற்பத்தியாளர்களுக்கான இந்திய சங்கம், டாடா மோட்டார் போக்குவரத்து நிறுவனம், பாரியளவில் வாகனங்களை உற்பத்தி செய்யும் மஹிந்திரா குழுமம் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரிதும் வரவேற்றுள்ளன.
இது தொடர்பில் வாகனங்கள் உற்பத்தியாளர்களுக்கான இந்திய சங்கத்தின் தலைவரும் டாடா மோட்டார் போக்குவரத்து நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளருமான ஷைலேஷ் சந்திரா குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் முன்னோக்கி சிந்திக்கும் முன்முயற்சியே இந்த ஒத்துழைப்பாகும். இது இந்தியாவில் மின்சார பயன்பாட்டு வாகனங்களின் பாவனையை அதிகரிக்க வழிவகை செய்வதோடு முதலீடுகள் அதிகரிக்கவும் துணைபுரியும்.
நாட்டில் சூழல் நேய மின்சார வாகனப் பயன்பாட்டின் வளர்ச்சிக்கு மாத்திரமல்லாமல் சுற்றுச்சூழல் நிலைபேறு தன்மையை நோக்கிய உலகளாவிய செயற்பாட்டில் இந்தியாவின் தலைமைத்துவத்தையும் வலுப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றுள்ளார்.
மஹிந்தரா குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அனிஷ் ஷாவும் இத்திட்டத்தை வரவேற்று பாராட்டியுள்ளார்.