காசாவில் 352ஆவது நாளாகவும் இஸ்ரேல் நேற்று (22) நடத்திய தாக்குதல்களில் மேலும் பல பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு மற்றும் மத்திய காசாவில் இடம்பெற்ற செல் குண்டுத் தாக்குதல்களில் ஏழு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்போது கான் யூனிஸ் நகரின் கிழக்கே உள்ள குசா பகுதியில் இடம்பெற்ற பீரங்கி தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாகவும் சமக காலத்தில் ரபா நகரின் கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வீச்சுகளை அடுத்து பலஸ்தீன செம்பிறை சங்க உறுப்பினர்கள் நான்கு உடல்களை மீட்டதாகவும் உள்ளுார் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தவிர மத்திய காசாவின் நுஸைரத் அகதி முகாமில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது.
இதேவேளை காசா நகரில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் நடத்திய வான் தாக்குதலில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுவர் உட்பட 22 பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தப் பாடசாலையை ஹமாஸ் அமைப்பு கட்டளை மையம் ஒன்றாக பயன்படுத்துவதாக இஸ்ரேல் இராணுவம் சுமத்தும் குற்றச்சாட்டை அந்த அமைப்பு மறுத்துள்ளது.
காசாவில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் தமது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலைகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த மாத ஆரம்பத்தில் நுஸைரத் அகதி முகாமில் உள்ள அல் ஜவுனி பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தின் ஆறு ஊழியர்கள் கொல்லப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.
காசாவில் ஓர் ஆண்டை நெருங்கும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.