– லக்ஷ்மன் நிபுணாரச்சியை நியமிக்க நடவடிக்கை
அநுர குமார திஸாநாயக்கவின் எம்.பி. பதவி பாராளுமன்றத்தில் வெற்றிடமாக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக இன்று (23) முதல் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
இதன் காரணமாக, இன்றிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் தனது பாராளுமன்ற ஆசனத்தை இராஜினாமாச் செய்திருப்பதாக அவர் தமக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் மூலம் அறிவித்திருப்பதால் ஒன்பதாவது பாராளுமன்றத்தில், உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அரசியலமைப்பின், 66(இ) உறுப்புரையின் பிரகாரமும், 1988ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்த்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 64(1) ஆம் பிரிவின் கீழ் இதனைத் தெரிவிப்பதாக செயலாளர் நாயகம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2020 தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் கொழும்பு தேர்தல் மாவட்டத்திற்கு ஒரு பாராளுமன்ற ஆசனம் கிடைத்தது. அதற்கமைய, குறித்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் விருப்பு வாக்குகளை பெற்ற லக்ஷ்மன் நிபுணாரச்சியை குறித்த பதவிக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.