பயமும் பதற்றமும் எமது முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தும். அதை நாம் எவ்வாறாவது சமாளிப்பது அவசியம்.
பயம் மற்றும் பதற்றத்தை போக்க முதலில் அதைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். உங்கள் பயத்தை பற்றி நீங்கள் அறிந்துகொள்வது அதை எவ்வாறு தடுப்பது அல்லது எவ்வாறு அதை சமாளிப்பது என்பதை அறிந்துகொள்ள உங்களுக்கு உதவும்.
எப்போதெல்லாம் பய உணர்வு உங்களுக்கு ஏற்படுகிறது? அது எங்கிருந்து தொடங்குகிறது? என்ற மூலத்தை நீங்கள் கண்டறியும்போது உங்கள் பயத்தின் pattern என்ன என்பதை உங்களால் காண முடியும்.
சில நேரங்களில் பயத்தையும்,பதற்றத்தையும் அனுபவிக்கும் போது, நம் உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்களின் மீது நமக்குக் கட்டுப்பாடு இருக்கிறது என்பதை நாம் மறந்து விடுகிறோம். எப்போதும் நாம் ஏதாவது தவறாக நடந்து விடுமோ என்று எதிர்மறையாக எண்ணி அஞ்சுகிறோம். ஆனால் பெரும்பாலும் அவ்வாறு நடப்பதில்லை.
நீங்கள் எதிர்கொள்ளப்போகும் ஒரு சூழ்நிலை உங்களுக்கு பயத்தையும் பதற்றத்தையும் தருகிறது என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். எதிர்மறையாக சிந்திப்பதை விட்டுவிட்டு நீங்கள் அந்த சூழ்நிலையை சந்தித்து, அதைச் சமாளித்து அதில் வெற்றி அடைவது போல எண்ணிப் பாருங்கள், உங்களது பயமும் பதற்றமும் உங்களை விட்டு விலகிவிடும். நம்பிக்கை பிறக்கும்.
பயம் மற்றும் பதற்றத்தை உணரும்போது உங்கள் உணர்ச்சிகளுடன் சிறிது நேரம் உட்கார முயற்சி செய்யுங்கள். அமைதியாக உட்காந்து தற்போதைய தருணத்தில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் நிகழ்காலத்தில் கவனம் செலுத்தும் போது வருங்காலம் குறித்த பயமும் பதற்றமும் குறைவதைக் காண்பீர்கள்.
பயமும் பதற்றமும் உங்களுக்கு கிடைக்கின்ற நல்ல வாய்ப்புகளை உங்களிடம் இருந்து பறிக்கின்றன. பயத்தை சமாளிப்பதற்கான ஒரே வழி அதை எதிர்கொண்டு முன்னேறுவதுதான். உங்களை பயமுறுத்தும் அனைத்தையும் எதிர்கொள்ளுங்கள், முதலில் சிறிய பயங்களை வெற்றி கொள்ளுங்கள்.
ஒருவரிடம் சென்று பேச சிலருக்குப் பயமாக இருக்கலாம், நாம் சரியாக வேலை செய்தாலும் அலுவலக கூட்டத்தில் கலந்து கொள்ள பதற்றமாக இருக்கலாம், அல்லது சில நேரங்களில் மாற்றத்தைக’ கண்டு நாம் அஞ்சலாம், இவ்வாறு உங்கள் சிறிய பயங்களை கண்டறிந்து அவற்றை துணிந்து எதிர்கொள்ளுங்கள். இன்னும் சிலருக்கு அவர்களது துறை சார்ந்த பயம் எப்போதும் இருக்கும், அதற்குக் காரணம் அந்த துறை சார்ந்த அறிவு அவர்களிடம் குறைவாக இருப்பதுதான். நாம் அதிகம் கற்றுக்கொள்ள கற்றுக்கொள்ள துறைசார் அறிவு நம்மிடம் அதிகரிக்கும், பயமும் பதற்றமும் விலகும். ஆழ்ந்த சுவாசம் உங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்த உதவும். மீண்டும் உங்கள் எண்ணங்களின் மீது கவனம் செலுத்த உதவும். நீங்கள் பதற்றத்தில் இருக்கும்போது உங்கள் இதயத்துடிப்பும், சுவாசமும் மிக வேகமாக இருக்கும், உங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள இந்த ஆழ்ந்த சுவாசப் பயிற்சி கைகொடுக்கும்.
நீங்கள் சுவாசப் பயிற்சி செய்யும் போது அது உங்களை அமைதிப்படுத்தும். இது உங்கள் பதற்றமான சூழ்நிலையை சமாளிக்க உதவும். இந்த ஐந்து உத்திகளையும் முயற்சி செய்து பாருங்கள். பயத்தையும் பதற்றத்தையும் வெல்வதற்கு முயற்சியுங்கள்.
ந.பாலகிருஷ்ணன்…