பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம் மற்றும் அரசியல் பதற்றத்திற்குப் பின்னர் அண்டை நாடான இந்தியாவில் இருந்து இடம்பெறும் ஏற்றுமதிகளில் 28 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
கடந்த ஓகஸ்டில் பங்களாதேஷுக்கான இந்தியாவின் ஏற்றுமதிகள் 681 மில்லியன் டொலர்கள் இருந்ததோடு இதுவே கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 943 மில்லியன் டொலர்களாக இருந்ததாக உத்தியோகபூர் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரம் பங்களாதேஷின் அண்மைய நிகழ்வுகள் அந்த நாட்டுடனான இந்தியாவின் வர்த்தகத்தில் முக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தாதபோதும் நீண்டகால இடையூறு பாதிப்பை செலுத்தக்கூடும் என்று மதிப்பீட்டு நிறுவனமான சிறில் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷுக்கான இந்தியாவின் பிரதான ஏற்றுமதிப் பொருளான பருத்தி ஏற்றுமதி இந்த ஆண்டு ஓகஸ்டில், கடந்த ஆண்டு ஓகஸ்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 10 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து பங்களாதேஷின் ஆடை உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
பங்களாதேஷின் கொள்வனவுக் கோரல் குறைந்திருப்பது அந்நாட்டு ஆடை உற்பத்திக்கான மூலப்பொருட்களை வழங்கும் இந்தியாவின் ஆடைத் தொழிற்துறையிலும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. எனினும் பங்களாதேஷில் இருந்து ஆடைகளைக் கொள்வனவு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் தற்போது இந்தியா பக்கம் திரும்பி வருகின்றனர்.