முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனான, கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்லவினால் கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் இரண்டு அடுக்குமாடி சொகுசு வீட்டுத் தொகுதியிலுள்ள வீடுகளை பயன்படுத்த தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (19) உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன குறித்த உத்தரவை வழங்கியுள்ளார்.
கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள சொகுசு அடுக்குமாடி தொகுதியில் இரண்டு வீடுகளை முறையே ரூ. 8 கோடி, ரூ. 6.5 கோடிக்கு அவர் கொள்வனவு செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்திருந்தது.
இது தொடர்பில் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் குறித்த சொத்துக்களை பயன்படுத்த தடை விதிக்கும் உத்தரவை வழங்குமாறு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தது.
குறித்த கோரிக்கையை பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி, எதிர்வரும் டிசம்பர் 19ஆம் திகதி வரை குறித்த சொத்துகளை பயன்படுத்துவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.