இஸ்ரேலியப் படை காசாவில் 341 ஆவது நாளாக நேற்று (11) தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியதோடு ஆக்கிரமிப்பு மேற்குக் கரையிலும் நடத்திய சுற்றுவளைப்பு மற்றும் தாக்குதல்களில் மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவின் தெற்கு நகரான கான் யூனிஸில் அல் கரா குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.
கான் யூனிஸின் மவாசி பகுதிக்கு அப்பால் உள்ள கடலில் இஸ்ரேலிய கடற்படை நடத்திய தாக்குலில் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
வடக்கு காசாவின் ஜபலியா நகரில் அல் நஜ்ஜார் குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டின் மீது வீசிய குண்டில் மூன்று சிறுவர்கள் மற்றும் இரு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோன்று மத்திய காசாவின் நுசைரத் அகதி முகாமில் அபூ அத்வி குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டு மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
காசாவில் ஒரு வருடத்தை நெருங்கும் இஸ்ரேல் இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 41,000ஐ தாண்டி இருப்பதோடு காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 95,000ஐ நெருங்கியுள்ளது.
காசா போரை ஒட்டி ஆக்கிமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பதற்றம் நீடிக்கும் சூழலில் டுபாஸ் நகரில் பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகில் நேற்று அதிகாலை இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதில் 18 தொடக்கம் 24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே பலியாகியுள்ளனர்.
இந்தத் தாக்குதலை உறுதி செய்திருக்கும் இஸ்ரேலியப் படை போராட்டக் குழு ஒன்றை இலக்கு வைத்து தாக்கியதாக குறிப்பிட்டபோதும் அது பற்றி மேலதிக விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை.
டுபாஸ் நகரில் இஸ்ரேலியப் படையின் சுற்றிவளைப்புக்கு மத்தியிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது நகரில் ஊரடங்கை பிறப்பித்த இஸ்ரேலியப்படை நகரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
டுபாஸ் நகருக்கான நுழைவு மற்றும் வெளிச்செல்லும் பாதைகளை இஸ்ரேலியப் படை மூடிய இருப்பதோடு நகரை நோக்கி வீதியைத் தோண்டும் இயந்திங்கள் மற்றும் கவச வாகனங்கள் செல்வதை காண முடிவதாக பார்த்தவர்களை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேற்குக் கரையின் வடக்கு முனையில் இருக்கும் டுபாஸ் நகர் ஜோர்தான் நாட்டு எல்லைக்கு நெருக்கமான நகராகும்.
மறுபுறம் துல்கர்ம் அகதி முகாமில் இஸ்ரேலியப் படை நேற்றும் படை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதனால் பொதுமக்களின் உடைமைகளுக்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. துல்கர்ம் முகாமை
இஸ்ேரலியப் படை தொடர்ந்து முற்றுகையிட்டிருப்பதாகவும், அங்கு மேலதிகப் படைகள், கனரக இயந்திரங்கள் மற்றும் புல்டோசர்களை குவித்திருப்பதாகவும் அங்கிருக்கும் வபா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளது. இதன்போது முகாமுக்குள் இருக்கும் வீதிகள் மற்றும் உடைமைகள் புல்டோசர் கொண்டு அழிக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
துல்கர்மில் கடந்த செவ்வாயன்று இஸ்ரேலிய சுற்றிவளைப்பின்போது பெண் ஒருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் மேற்குக் கரையின் ரமல்லாவில் நேற்று காரை மோதவிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் இஸ்ரேலிய ஆடவர் ஒருவர் காயமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் அதிகரித்துவரும் பதற்றத்திற்கு மத்தியில் 680க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதே காலப்பகுதியில் பலஸ்தீனர்கள் அல்லது போராளிகளின் தாக்குதல்களில் சுமார் 40 இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய உள்ளூர் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.