விருந்தும் முடிய விளக்கும் அணைய வீழும் நீழல் உனதே கவிதா இந்த இரவும் உனதே’
என்று கம்பன் பாற்கடலில் அமுது கடைந்த மாதிரி அழகின் தூதுவனாய் தன் கவிதையை ஆரம்பித்து கவிதாவில் முடிக்கிறார் கவிஞர் வேதாந்தி ஷேகு இஸ்ஸதீன். அவர் கவிதை எழுதுவதற்கு அவரது உள்ளத்து உணர்ச்சிதான் முதற்காரணம். அந்த உணர்ச்சி வேறெந்தச் சந்தர்ப்பத்தையும் விட காதலின்போதுதான் கட்டவிழ்ந்து வருகிறது. அவரது உணர்ச்சி வெள்ளமாய் பிரவாகிக்கும்போது கவிதை அதன்மேல் மிதந்துகொண்டு வருகிறது.
‘படைப்புகள் வெளிப்படும்முன் இறைவனிடம் முதலில் உதித்த உணர்வு காதல். அந்தக் காதல்தான் பிரபஞ்சத்தின் படைப்புக்கும் காரணமானது. இறைவன், தான் காதலிக்கப்படவேண்டும் என்று விரும்பியதால்தான் பூமியில் மனிதனைப் படைத்தான். அவ்வழிவந்த காதல்தான் வேதாந்தியின் இதயத்திலும் கவிதையாய்க் கனிந்திருக்கிறது.
‘மார்கழி மேகம் வந்ததும்
மண்ணுக்கு வேர்வை தந்ததும்
காலத்தில் வந்ததல்லவா
காதலின் பந்தமல்லவா?’(சங்கமம்)
இந்த அற்புதமான பாடல்கூட ஒரு கவிதையாகிக் காதலுக்குக் கட்டியம் கூறுகின்றது.
கவிதை என்பது ‘கவிதா’ என்ற சொல்லிலிருந்தே வந்தது. அதனால்தான் கவிஞர் வேதாந்தி கவிக்குயில் கவிதாவைக் காதலித்தார். ‘கி.மு, கி.பி’ என்று இருப்பது போல், காதலுக்கு முன் (கா.மு) காதலுக்குப் பின் (கா.பி) என்று அவரது வாழ்க்கைக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.
பாலஸ்தீன மக்களுக்கு மண் விடுதலை எப்படி பிறப்புரிமையோ அப்படி இலங்கை சிறுபான்மைக்கு அரசியலுரிமை ஒரு பிறப்புரிமை என்கிறார். வேதாந்தியின் இந்த எழுந்தமான இன உணர்ச்சி ஆக்ரோசமான வெளிப்பாட்டையும் அனுபவத்தையும் வெளிப்படுத்துகின்றன.
‘இன்று முஸ்லிம் சமூகம் இலங்கையில் முகம்கொடுத்து வரும் இன, மத துவேசங்களை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் இந்நாட்டில் அவர்கள் பஞ்சைகளாய், பராரிகளாய், நாடோடிகளாய், சொந்த வீட்டுக்குள்ளேயே அகதிகளாய் அந்தரிக்கவேண்டிய நிலை ஏற்படுவது வெகுதூரத்தில் இல்லை என்று ஆண்டு 2003இல் என்னுடைய ‘முள்மலர்கள்’ கவிதை நூலில் விதந்துரைத்த வேதாந்தி ஓர் ஆரோக்கியமான முஸ்லிம் ஜனநாயக சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய ஒரு தார்மீக கவிஞனின் கடமையாக அதைக் கனாக் கண்டிருக்கிறார்.
நான் அவரைப் பலமுறை சந்தித்திருக்கிறேன். பிரியத்தோடு பேசியிருக்கிறேன், இலக்கியம் உரையாடியிருக்கிறேன். வெளிநாட்டிலிருந்தும் தொடர்புகொண்டிருக்கிறேன். அவரது அன்பை எண்ணிப் பார்த்தேன். அவரது கவிதைகள் அவர்பால் எனக்கு மயக்கத்தை ஏற்படுத்தின. அவர் தமிழை மதிப்பதைப் போல நான் அவர் மீது மரியாதை வைத்திருக்கிறேன்.
அவர் அன்போடு வரவேற்பார். ஆசாபாசம் பேசுவார். அதீத இலக்கியம் பேசுவார்.‘எழுதிய கவிதைகளை வாசியுங்கள்’ என்பார். கம்பீரத்தில் ஒரு கனிவோடு, முதுமையில் ஒரு அடக்கத்தோடு, பாராட்டுவதில் ஒரு பாங்கோடு, நன்றி சொல்வதில் ஒரு நாகரிகத்தோடு எல்லாரையும் மதிக்கிற மாண்போடு அவர் நடந்துகொள்வார். அவர் இப்போது தாளாத மனசோடு ஓய்வு பெற்றுக்கொண்டிருந்தாலும் தாய்மொழி பேசும்போது புத்துணர்ச்சியோடுதான் பேசுகிறார்.
கவிஞர் வேதாந்தி ஷேகு இஸ்ஸதீன் சின்னகமது லெப்பை உடையார் முஹம்மது ஹஸன் தந்தைக்கும் செய்யது அப்துல் ரகுமான் மௌலானா சுபைதா உம்மா தாய்க்கும் 1944. 05. 12 வெள்ளி அன்று அக்கரைப்பற்றில் ஒரு செல்வாக்குடைய குடும்பத்தில் பிறந்தார்.
‘தாயின் கர்ப்பத்திலேயே
தர்ம யுத்தத்திற்காய்
உயிர்த்தியாகம் செய்வேன்
என்று உயில் எழுதிக் கொடுத்து விட்டு
உலகை மிதித்தவன் நான்’
என்று பாடும் வேதாந்தியை, தனது இனத்துக்காக மட்டுமல்ல தவறிழைக்கப்பட்ட எல்லா இனங்களுக்குமாய் எழுத்துக்களால் ஒரு மானுட நேயனாய், மக்கள் பிரதிநிதியாய் அக்கரைப்பற்று மண் இனங்காட்டியிருக்கின்றது.
கவிஞரின் 80ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சமீபத்தில் ‘வரலாறாகும் வேதாந்தி’ என்னும் பெயரில் அக்கரைப்பற்று கடற்கரை ‘மென்கோ கார்டன்’ மன்றத்தில் நிகழ்ந்த பாராட்டு விழாவில் அவரது நிழற்படம் பொறித்த இருபத்தைந்து ரூபாய் இலங்கை முத்திரை வெளியிட்டு, ஊர்மக்கள் அவரைக் கொண்டாடியிருக்கிறார்கள்.
‘சமூக அரசியல் பரிமாணங்கள் உள்ள இலக்கிய ஆளுமைகளில் உணர்வுத் தெளிவும், கவித்துவக் கூடுகையும் கொண்ட உண்மையான கவிஞர் வேதாந்தி’ என்று பாராட்டிய முன்னாள் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் மதிப்புரை (26.08.1997) ஒளியின் மொழியாய் மிளிர்கிறது.
‘கவிஞர் வேதாந்தி ஒரு தலைசிறந்த கவிஞன்’ என்று பிரபல்யமான ஆங்கில இந்திய டைம்ஸ் பத்திரிகையும் கூட எழுதியிருப்பதை உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்குச் சென்றபோது வாசித்த மு.கா. கட்சித்தலைவர் றவூப் ஹக்கீம், அதை அவரது உரையில் பதிவிட்டிருக்கிறார்.
தென்கிழக்கின் தேமதுரக் கவிதை தந்த வேதாந்தி, ஆங்கில ஆசிரியராகவே தன் அரசாங்க உத்தியோகத்தை ஆரம்பித்தார். பின் இலக்கிய ஆர்வலராகவும், படைப்பாளராகவும், சட்டத்தரணியாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உப தலைவராகவும், கட்சிப் பேச்சாளராகவும், தமிழ் உணர்வாளராகவும் உன்னதம் கண்டுள்ளார்.
இலங்கை இனவாத அரசியல் அராஜகத்திற்குள் அடங்கிக் கிடக்கும் மக்களை மீட்பதற்கு தனது கவிதையை போராயுதமாகவும், பேச்சு மேடைகளை போராட்டக் களமாகவும் மாற்றிக்கொண்டவர்.
தூய்மையற்ற, நேர்மையற்ற, விலைபோகும் சுயநல அரசியல் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் செயல்முறை மாறியபோது, வெஞ்சினம் கொண்டெழுந்த வேதாந்தி அதை விட்டே வெளியேறினார். குற்றமும், குந்தகமும், குளறுபடியும் அதில் நிலைத்தபோதும் அவர் கட்சிக்கு ஒரு சவாலாகவே விளங்கினார். பணம், பதவி என்று சிங்கள இனவாதக் கட்சிகளோடு சேர்ந்து பேரம்பேசி மக்களுக்குப் பாரபட்சம் காட்டியபோதெல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் சிதறிப்போனது கண்டு வருந்தினார்.
அகம், புறம் பேசும் ஆன்ம கவிதை ‘நாம் எனும் வேடதாரிகள்’. இக்கவிதை மானுட வேடமிட்ட மிருகங்களின் முகமூடிகளைக் களைகின்றன. சமூகப் பிரக்ஞை கண்டு அந்த சூத்திரதாரிகளின் சாயத்தையும் கலைத்திருக்கின்றது.
‘நீங்களும் நானும்
ஆளுக்காள் ஆடிய
நாடகத்தின் வேடங்களை
தரம் பிரித்து உடை கலைத்து
வெளியில் சொல்லி விடுவேன்
சரியைப் போல் பிழைக்கும்
நன்மையைப் போல் தீமைக்கும்
நம்பிக்கையைப் போல் அறிவுக்கும்
கருணையைப்போல் கொடுமைக்கும் உண்மையைப்போல் பொய்மைக்கும் ஆதியுமில்லை அந்தமுமில்லை அதனால் மூலமும் வேசமும் ஒன்றாகுமா? ‘
உண்மையின் முகத்தை வெளிக்காட்டுவதற்கு வேதாந்தியால் மட்டுமே முடியும். இந்தத் துணிச்சல் அவருக்கு மட்டுமே உரியது.
2000– 2004 ஆண்டு காலச் சூழலில் வேதாந்தியின் அறிவு, ஆற்றல், ஆளுமை, ஆதரவு என்பவற்றை பயன்படுத்திக்கொள்ள, அன்றைய அரசாங்கம் அவரை பாராளுமன்ற உறுப்பினராக உள்வாங்கியபோது, அவர் தகவல் ஊடகத்துறை பிரதியமைச்சரானார்.‘லேக்ஹவுஸ் பத்திரிகைத்துறை, ‘ரூபவாகினி’ தொலைக்காட்சி, அரச ஊடக நிறுவனங்கள் அவரது அனுசரணையின்கீழ் ஒருங்கிணைக்கப்பட்டபோது அவை ஆரோக்கியமாய் இயங்கின.
1990 போராட்ட காலத்தில் 75000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஆயுத முனையில் சொந்த ஊரை விட்டு விரட்டியடிக்கப்பட்டதையும், 2500க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பள்ளிவாசல்களிலும் கிராமங்களிலும் மிலேச்சத்தனமாகக் கொலை செய்யப்பட்டதையும், ஒரே மொழியில் பேசி, ஒரே மொழியில் பழகி, ஒரே உணவை உண்டு மகிழ்ந்து ஒரே சமுதாயமாய் ஒன்றுபட்டு வாழ்ந்த மனித குலத்திற்கெதிரான பாதகச் செயலை காலம் கடந்தும் வலிக்கிற சோகத்தை வேதாந்தி, கண்ணீரிலும் இரத்தத்திலும் குழைத்துக் குழைத்து எழுதியிருக்கிறார்.
பிளவுபடுத்திய பிரிவனைவாதிகளைப் பார்த்து மானுட நேயத்தின், மனித ஒருமைப்பாட்டின் தொனியில் தாய்மொழி தமிழில் பாடுகிறார். இது தமிழ் வளர்ச்சிக்கு அவர் எவ்வளவு சேவைகளைச் செய்திருக்கிறார் என்பதை உள்ளுர உணர்ந்துகொள்ள முடிகிறது.
வேதாந்தியின் கவிதைத் தொகுதியில் காணப்படும் க(விதை)களில் முளையாய் விழித்திருக்கும் படிம அழகு பிரமிக்க வைக்கிறது.
பள்ளிக் காலத்தில் நானறிந்தவரை வேதாந்தி என்பவர் கவிஞர். அதனால் அவரது படைப்பை ரசித்தேன். எனக்கு மூத்தவராயினும் அவர் மலர்ந்து நின்ற காலத்தில் ஏனைய இலக்கிய இலக்கணம் படித்த பேராசிரியக் கவிஞர்களுக்கு இருந்த பின்னணிகள் எதுவும் அவருக்கு இல்லை. அவருக்குள்ளே விதையாய்ப் பதிந்து முளைவிட்ட கவித்துவம் என்பது அவருக்கு இயல்பாய் கிடைத்த ஒரே ஒரு மூலாதாரம்.மரபுமீறல், மக்கள் சார்பு, இயற்கையில் இணைவது, படைப்புச் சுதந்திரம் என்னும் அடிநிலைப் பண்புகள் யாவும் வேதாந்தியின் கவிதைகளில் வீறுணர்வு அழுத்தமாய்ப் பதிவாகி இருக்கின்றன. அதனால் அவருடைய நெஞ்சிலிருக்கிற தெம்பும், அறிலிருக்கிற திறமும், கண்ணிலிருக்கிற காதலும் படைப்பிலிருக்கிற சூஃபித்துவமும் உடம்பிலிருக்கிற ஆரோக்கியமும் காலமெல்லாம் நிலைக்க வேண்டுமெனப் பிரார்த்திப்போம்