நைஜீரியாவின் மத்திய மாநிலமான நைகரில் எண்ணெய் கொள்கலன் லொறி ஒன்று பயணிகள் மற்றும் கால்நடைகளை ஏற்றிய லொறியுடன் மோதிய விபத்தில் இதுவரை 59 பேர் பலியாகியுள்ளனர். ‘
கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற இந்த விபத்தை அடுத்து இரு வாகனங்களும் பெரும் வெடிப்புடன் தீப்பற்றி எரிந்ததாக நைகர் மாநில அவசர முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்போது அருகில் இருந்த மற்ற வாகனங்களும் தீப்பற்றியுள்ளன.
இரு வாகனங்களும் தீயில் முழுமையாக கருகி இருப்பது மற்றும் கணிசமான கால்நடைகள் கொல்லப்பட்டிருப்பது சம்பவ இடத்தில் இருந்து பிடிக்கப்பட்ட படங்களில் தெரிகிறது. வாகனத்துக்குள் இருந்து கருகிய சடலங்கள் மற்றும் கால்நடைகளின் உடல்களை மீட்டதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என, நைஜர் மாநில அவசரப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஹுசைனி தெரிவித்துள்ளார்.
நைஜீரியாவில் வீதிகள் மிக மோசமான நிலையில் இருப்பதால் எரிபொருள் கொள்கலன் லொறிகள் அங்கே அடிக்கடி விபத்துக்கு உள்ளாவதாகக் கூறப்படுகிறது.
2020 ஆம் ஆண்டில் மாத்திரம் நைஜிரியாவில் 1,513 எரிபொருள் கொள்கலன் லொறிகள் விபத்துக்குள்ளாகி 553 பேர் உயிரிழந்திருப்பதோடு 1,142 பேர் காயமடைந்துள்ளதாக நைஜீரிய மத்திய வீதி பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்தள்ளது.