Sunday, November 24, 2024
Home » ஊழலுக்கு எதிராக அநுரகுமார நீதிமன்றம் செல்லாதது ஏன்?

ஊழலுக்கு எதிராக அநுரகுமார நீதிமன்றம் செல்லாதது ஏன்?

ரிஷாத் பதியுதீன் எம்.பி கேள்வி!

by Gayan Abeykoon
September 10, 2024 7:58 am 0 comment

“ஊழலை ஒழிப்பதற்கும் மோசடியாளர்களைத் தண்டிப்பதற்கும் ஜனாதிபதிக்குரிய அதிகாரமே தேவை என்று தேசிய மக்கள் சக்தி கருதக்கூடாது” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டணியின்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து குருநாகல் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவூப் ஹக்கீம் மற்றும் சுமந்திரன் ஆகியோர் நீதிமன்றத்தை நாடியமையினால் ஒன்லைன் விசா மோசடி முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. புற்றுநோய் மருந்துகளில் மோசடி இடம்பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இம்மோசடி தொடர்பாக  போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.

எனவே,  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால்தான் ஊழல் மற்றும் மோசடிகளைத் தடுத்து நிறுத்த முடியும் என தேசிய மக்கள் சக்தி கருதக்கூடாது.

நாட்டில் ஊழலை ஒழிப்பதாகக் கூறும் அநுரகுமார திசாநாயக்க ஊழல்வாதிகளுக்கு எதிராக நீதிமன்றம் செல்லாதது ஏன்?. தவறைத் தண்டிப்பதற்கு அதிகாரம்தான் தேவை என்பதில்லை. கவர்ச்சியான பிரசாரங்களால் இளைஞர்களைத் திசைதிருப்புவதற்கு கையாளும் தந்திரங்களாகவே ஜே.வி.பியின் பிரசாரங்கள் காணப்படுகின்றன.

ஒரு தடவையாவது அதிகாரத்தை ஒப்படைக்குமாறு கோரும் இவர்களுக்கு அதிகாரம் பெறுவதற்கான எவ்வித அருகதையும் இல்லை. அனுபவமற்ற எம்.பிக்கள் ஆட்சியதிகாரத்துக்கு அவசரப்படுவதேன்? கோட்டாபயவின் காலத்தில் நிகழ்ந்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

பொருளாதார நிபுணர்கள் எங்களது அணியிலேயே உள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் புதல்வரான சஜித், ஏழைகளின் துயரங்களைத் தெரிந்தவர். சிறுபான்மைச் சமூகங்களின் பாதுகாப்பை சஜித் பிரேமதாசவின் ஆட்சியே உறுதி செய்யும்” என அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT