குரங்கம்மை தொற்றின் மிக அபாயகரமான பிறழ்வு ஒன்று ஆபிரிக்காவுக்கு வெளியில் முதல் முறை சுவீடனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதல் நோய் சம்பவம் பற்றி நேற்று முன்தினம் அறிவித்த சுவீடன் அரசு எதிர்வரும் நாட்களில் அது பிராந்தியத்தில் பரவக்கூடும் என்று தெரிவித்துள்ளது. கொங்கோவில் பதிவான Clade 1b வகை குரங்கம்மை சுவீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில் சிகிச்சை நாடிய ஒருவரிடம் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
ஆபிரிக்கக் கண்டத்துக்குச் சென்றபோது அவருக்கு அந்த நோய் தொற்றியதாக மருத்துவர்கள் கூறினர்.
இதேவேளை பாகிஸ்தானிலும் இந்த குரங்கம்மை பிறழ்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து பாகிஸ்தான் திரும்பிய மூவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த குரங்கம்மை தொற்றினால் கொங்கோவில் 450 பேர் வரை உயிரிழந்திருப்பதோடு இந்த நோய்த் தொற்று தற்போது மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடுகளுக்கு பரவியுள்ளது. உலக சுகாதார அமைப்பு கடந்த புதனன்று குரங்கம்மையை உலக பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நெருக்கமான தொடர்புகளால் பரவும் இந்தத் தொற்றில் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதோடு ஆபத்தான் தோல் புண்கள் ஏற்படும். இதில் தொற்றுக்கு உள்ளான 100 பேரில் நால்வர் மரணிக்கும் அபாயம் உள்ளது.