– இளம் வயதிலே ஓய்வை அறிவித்த லுவானா அலோன்சோ
நீச்சல் வீராங்கனை ஒருவரின் அழகு ஏனைய வீரர்களின் கவனத்தை சிதறடிப்பதாக கூறி ஒலிம்பிக்கிலிருந்து அனுப்பப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் கடந்த ஜூலை 26 ஆம் திகதி ஆரம்பித்த 2024 பரிஸ் ஒலிம்பிக் போட்டி இன்னும் இரு நாட்களில் நிறைவடையவுள்ளது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்குபற்றுகிறார்கள்.
இதில் பராகுவே நாட்டைச் சேர்ந்த 20 வயது வீராங்கனை லுவானா அலோன்சோ ஜூலை 27ஆம் திகதி தான் பங்குபற்றிய பெண்களுக்கான 100 மீற்றர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் அரையிறுதியில் 0.24 செக்கன்களில் தோல்வியை சந்தித்தார்.
வீர வீராங்கனைகள் தோல்வியை சந்தித்தித்தாலும் ஏனைய வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக இறுதிப் போட்டி வரை ஒலிம்பிக்கில் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் லுவானா அலோன்சோவும் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தனது நாட்டு அணிக்கென வழங்கப்பட்ட ஆடைகளை அணியாது தான் விரும்பிய ஆடைகளுடன் வலம் வந்துள்ள அவர், அதிக அழகால் வீரர்களின் கவனத்தை சிதறடிப்பதாக, அதே நாட்டைச் சேர்ந்த வீரர்கள் சிலர் தங்கள் நாட்டு ஒலிம்பிக் குழுவிடம் முறையிட்டுள்ளனர்.
அது மாத்திரமன்றி, அவர் வீரர்களை உற்சாகப்படுத்துவதை விடுத்து, தனது சொந்த விருப்பங்களுக்கேற்ப ஒலிம்பிக் கிராமத்திலிருந்து வெளியேறி பல்வேறு இடங்களுக்கு சுற்றியுள்ளதோடு, அதனை தனது தாகவம் டிஸ்னிலாந்திற்கும் சென்றதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் தான் அமெரிக்கா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்க விரும்புவதாகவும் பராகுவேயை பிரதிநிதித்துவப்படுத்துவதில் தமக்கு மகிழ்ச்சியாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு காரணம் அவர் அமெரிக்க கல்லூரியில் கல்வி கற்றமை மற்றும் அமெரிக்க அணிக்கான ஒலிம்பிக் தகுதிகள் பராகுவேயை விட மிகவும் வித்தியாசமானது என்பதுதான் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், லுவானா அலோன்சோ அணிக்குள் இருப்பது பராகுவே அணிக்குள் பொருத்தமற்ற சூழ்நிலையை உருவாக்குவதாலும், தாங்கள் அறிவுறுத்தியபடி விளையாட்டு வீரர்களின் தங்குமிடத்தில் இரவைக் கழிக்காததாலும் அவரை அனுப்பியதாக பராகுவே ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் லாரிசா ஷேரர் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதையடுத்து, நாட்டிற்கு திரும்பும்படி சொந்த நாட்டினாலேயே லுவானா கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
ஆனால், நாடு திரும்பியுள்ள லுவானா அலோன்சோ, தான் வெளியேற்றப்படவில்லை என மறுத்துள்ளதோடு, இது தவறான குற்றச்சாட்டு எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தாம் நீச்சல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.