– எம்.பி. பதவியை இழப்பது உறுதி
அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெனாண்டோ ஆகியோரை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தீர்மானத்தை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
ஐ.ம.ச. நடவடிக்கை சட்டபூர்வமானதும் சரியானதும் என உயர் நீதிமன்றம் இன்று (09) தனது தீர்மானத்தை அறிவித்தது.
இறுதித் தீர்ப்பை வழங்கிய நீதியரசர்களான விஜித மலல்கொட, அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணை இடம்பெற்றது.
இதேவேளை, மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெனாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்யும் ஐ.ம.ச. கட்சியின் நடவடிக்கை சட்டவிரோதமானது எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கட்சியின் முடிவை செல்லுபடியாக்குமாறு தெரிவித்து மனுக்களில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிராகரிப்பதாக மூவரடங்கிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனவே இதன் காரணமாக, அவர்கள் இருவரும் தங்களது பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற ஒரு தீர்ப்பு காரணமாக, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹாபிஸ் நசீர் அஹமட் தனது பாராளுமன்ற உறுப்புரிமை பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரின் பெனாண்டோ ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பி. என்பதோடு அவர் சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக பதவி வகிப்பதோடு, மனுஷ நாணயக்கார காலி மாவட்டத்திலிருந்து கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார் என்பதோடு, அவர் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுப் பதவியை வகிக்கின்றார்.