அனைத்து வகையான குற்றங்களுக்கும் தண்டனை உறுதி செய்யப்படும் என்றும், அனைத்து அரசு நிறுவனங்களின் இழந்த பெருமை மீண்டும் புத்துயிர் பெறும் என்றும், பங்காளதேஷில் புதிதாக அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் நேற்றையதினம் பதவியேற்றதைத் தொடர்ந்து தனது முதலாவது உரையில் தெரிவித்தார்.
பங்களாதேஷில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நேற்று (08) பதவியேற்றது.
பங்களாதேஷில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்த 3 நாட்களுக்குப் பின்னர் பங்கபாபனில் இடம்பெற்ற தனது சத்தியப்பிரமாணத்தைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கான தனது முதலாவது உரையை முகம்மது யூனூஸ் நிகழ்த்தியிருந்தார்.
அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,
தனது பல்வேறு நடவடிக்கைகள் மூலம் குற்றங்களைச் செய்தவர்களுக்கு விரைவில் சரியான தண்டனை வழங்கப்படும். அனைத்து துறைகளிலும் உள்ள குற்றங்கள் விசாரிக்கப்படும். என்று அவர் கூறினார்.
இது அனைத்து அமைச்சுகள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பலவற்றிற்கும் பொருந்தும் என்று பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் தெரிவித்தார்.
முந்தைய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மாற்றமாக இந்த நிறுவனங்களின் இழந்த மகிமையை மீண்டும் கொண்டு வர முன்வருமாறு அழைப்பு விடுத்த அவர், முகம்மது யூனுஸ் அனைத்து நிறுவனங்களையும் அதன் உறுப்பினர்களையும் அந்தந்த கடமைகளைச் சரியாகச் செய்து, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதன் மூலம் நாட்டின் இரண்டாவது சுதந்திரத்தை அனுபவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
தேசத்தின் சார்பாக, ஒவ்வொருவரும் தமது பணியிடங்களுக்கு பயமின்றி சென்று, தங்கள் முழுத் திறனை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் வழங்குமாறு கேட்டுக்கொள்வதாக, அவர் இதன்போது குறிப்பிட்டார்.
இந்த புதிய அரசு பங்களாதேஷில் தேர்தலை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் பரிஸில் மருத்துவ சிகிச்சையில் இருந்த யூனுஸ், போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று நேற்று டாக்கா திரும்பியிருந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த நாடு மிகவும் அழகான தேசமாக மாற இது ஒரு வாய்ப்பு. எங்கள் மாணவர்கள் எந்தப் பாதையைக் காட்டுகின்றார்களோ, அதனை முன்னெடுத்துச் செல்வோம்” என்று தெரிவித்தார்.
யூனுஸ் தலைமையிலான இந்த இடைக்கால அரசில் 16 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். முகம்மது யூனுஸுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பின்புலம்
பங்களாதேஷில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து பங்களாதேஷின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, கடந்த 05ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தார். இராணுவ விமானம் மூலம் டாக்காவில் இருந்து புதுடெல்லிக்கு தப்பி வந்த அவர், தற்போது அவர் டெல்லியில் இரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷை விட்டு ஷேக் ஹசீனா வெளியேறியதை அடுத்து அந்நாட்டின் இராணுவத் தளபதி நாட்டின் நிர்வாகப் பொறுப்பை ஏற்பதாக அறிவித்தார். இதையடுத்து, இடைக்கால அரசை அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் இராணுவத் தளபதி ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட வேண்டும் என்றும், வேறு யாரை நியமித்தாலும் அதனை தாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் மாணவர் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, இடைக்கால அரசின் தலைவராக முகம்மது யூனுஸ் தற்போது பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.