Sunday, November 24, 2024
Home » சக்தி கிரவுன் கிராண்ட் பைனல் ஓகஸ்ட் 24 மாலை 6.00 மணி முதல்

சக்தி கிரவுன் கிராண்ட் பைனல் ஓகஸ்ட் 24 மாலை 6.00 மணி முதல்

by Rizwan Segu Mohideen
August 5, 2024 4:31 pm 0 comment

இலங்கையின் வடக்கு எல்லையில் இருக்கும் தொண்டைமானாற்றுப் படுகையின் உள்ளகக் கிராமத்தில் இடம்பெறும் கோயில் இசைக்கச்சேரியில் ஒலிக்கின்ற குரல், இலங்கையின் புத்தளம், மன்னார் வரைப் பரந்துள்ள கிறிஸ்தவ தேவாலயங்களினுடைய இசைக்கச்சேரிகளில் இருந்து கேட்கின்ற கானம், கிழக்கு மற்றும் மத்திய மாகாணத்தின், முஸ்லிம் கிராமங்களின் பள்ளிவாசல்களின் இசைக்கச்சேரிகளில் இருந்து எழும் நாதம் முதல், இவை அனைத்திலிருந்தும் துளியும் பிரிக்க முடியாத, இலங்கையின் சிங்கள இசைக்கச்சேரிகளிலும் ஒலிக்கும் தமிழ்க் குரல்கள் வரை, எட்டுத் திசையும் எட்டும், அத்தனை, எதிர்கால இசைப்படைப்பாளிகளுக்கும், ஏதோ ஒரு வகையில் உரம் தந்து, புடம் போட்டு வெளி விட்டது என்னவோ, இரண்டரை தசாப்தங்களாக, சக்தி நிறுவனம் படைத்த, பல குரல் தேடல்கள் மூலமாக வெளி வந்த திறமைக் குரல்களே என்பதை மறுக்க முடியாது.

இலங்கையின் இசைத் துறைக்கு அதிகப் பணியாற்றிய ஒரே தனியார் நிறுவனம் என்னும் பெருமை, சக்தி நிறுவனத்தையே சாரும். சக்தி வானொலியின் மூலமாக முதலில் ஒலிக்கத் தொடங்கிய, சக்தி Radio Super Star இலிருந்து, பாட்டுப் பாடவா, இளைய கானம் போன்ற சக்தி தொலைக்காட்சியின் முதல் இசைத் தேடல்கள் வரை, பல வடிவங்களில் இந்தத் தேடல் பரிணமித்தது.

சக்தி தொலைக்காட்சி மூலமாக செய்யப்பட்ட இப்படியான நேரடித் தேடல் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட கலைஞர்கள் மீண்டும், இலங்கையில் இடம்பெற்ற Voice போன்ற வேறு நட்சத்திர நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு மிகப் பெரிய பெயரையும் புகழையும் பெற்றிருந்தார்கள். இன்று தென்னிந்தியாவில் வியாபித்து நடக்கும் போட்டிகளில் சென்று வெற்றி பெற்ற போட்டியாளர்கள் கூட, சக்தியில் முதன் முதலாக வந்து பாடி அனுபவம் பெற்றவர்கள் என்பது சிறப்பு. இப்படியாக இலங்கையின் இசைத் தேவைக்கான அல்லது இசை மேடைக்கான பங்காற்றுவதில் சக்தி தொடர்ந்தும் முன்னிலை வகித்துக் கொண்டிருக்கின்றது என்பதையும் நாங்கள் இங்கு தெரிவிக்க வேண்டும்.

சக்தி Super Star, இசை இளவரசர்கள், சக்தி Global Super Star, நகர்ப்புறங்களுக்கு இடையிலான இசைப் போர், இப்படிப் பல பரிமாணங்களில் மீண்டும் மீண்டும், புதிதான வித்துக்களைக் கொண்டு வந்து, எதிர்கால இசைப் படைப்பாளர்களை உருவாக்கிய சக்தியின் ராஜபாட்டையின் மிக முக்கியமான மைல் கல் தான் சக்தி crown.

இலங்கையின் மிகவும் பின் தங்கிய இடங்களில் இசைக் கனவோடு இருப்பவர்கள் பலர். அவர்களுக்கான வாய்ப்பை அவர்களிடமே சென்று தேர்ந்தெடுத்துத் தருவதன் மூலம், அவர்களை நகர்ப்புறத்துக்கு அழைத்துப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. இந்தத் திட்டத்தின் முக்கிய அங்கமாக இசைப் பயிற்சியாளர்களாக, மூவர் தெரிவு செய்யப்பட்டு, அவர்கள் மூலமாக மூன்று குழுக்களாக இந்தப் போட்டியாளர்கள் பிரிக்கப்படுகின்றனர், அந்தக் குழுக்களுக்குள் சிறந்த பாடகர்களைத் தெரிவுசெய்து, குழுக்களுக்கிடையே நடைபெறுகின்ற போட்டியாய், அவர்களை இசைத்துறைக்கு அழைத்து வருகின்ற ஒரு அதீதப் புது முயற்சியாய் இடம் பெற்றது தான் சக்தி Crown.

சக்தி Crown இனுடைய போட்டியிலே, இலங்கையின் பல பாகங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் பங்கு கொண்டு, இப்போது அவர்களிலே கிரீடம் சூட்டப்படுபவர் யார் என்பதற்கான போராட்டம் நடைபெறுகின்றது. அதிலே போட்டியாளர்கள் மாத்திரமின்றி, குழுத் தலைவர்களான பயிற்றுவிப்பாளர்களும் போட்டியாளர்களாக மாறி, பரிசு பெறும் திட்டமாக, புதிதாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது சக்தி crown இனுடைய இறுதிப் போட்டி. இது, எதிர்வரும் ஓகஸ்ட் 24 ஆம் திகதி, தெற்காசியாவின் மிகப் பெரிய தொலைக்காட்சிக் கலையகமாகத் திகழும் இரத்மலானை Stein கலையகத்திலே இடம்பெறக் காத்திருக்கின்றது.

இந்த இறுதிப் போட்டிக்காக அறுவர் தெரிவுசெய்யப்பட்டனர். அவர்களில் இருந்து வெற்றி பெறுபவர் யார் என்பதைத் தெரிவு செய்வதற்கு இந்தியாவின் தலை சிறந்த இசைப் படைப்பாளர்கள், நேரடியாக நடுவர்களாக வருவதற்கும் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இந்தப் போட்டியின் மூலமாகத் தெரிவுசெய்யப்படும் வெற்றியாளர்களுக்கு மனம் நிறைந்த பணப்பரிசில்களும் எதிர்காலத்தில் இசைத்துறையில் நீட்சி பெறுவதற்காக வாய்ப்புகளும் இந்த சக்தி Crown இனுடைய ஆரம்பத்தில் இருந்தே நிகழ்ச்சி அமைப்பாளர்களால் ஏற்பாடு செய்யபபட்டது ஒரு புதிய மற்றும் சிறந்த உத்தியும் ஆகும்.

இலங்கையில் இருக்கும் தமிழ்க் கலைஞர்களுடைய தனித்துவ அடையாளத்துக்காய்ப் போராடும், சக்தியின் பயணத்தோடு, நாடு முழுவதுமாக இருக்கும் எமது மக்களும் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதனூடாக சக்தியுடன் கை கோர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT