அம்பாறை, இங்கினியாகல, நாமல் ஓயா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 2 பெண்கள், 2 பொலிஸார் ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கராண்டுகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட இத்துப்பாக்கிச் சூட்டில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 55 வயதான தாய் மற்றும் அவரது 17 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளனர். இதன் பின்னர் சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தரும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளார்.
இன்று (04) அதிகாலை 3.35 மணியளவில் கரடுகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் லஹிரு உதார விதானகே என்பவர் மீது, அம்பாறை இங்கினியாகல, நாமலோயா பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தர் T56 துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் நெல்லியத்த பிரதேசத்தில் மற்றுமொரு வீட்டிற்குச் சென்ற குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், அங்கு நீண்ட காலமாக நிலவி வந்த காணித் தகராறு காரணமாக இரண்டு பெண்களை சுட்டுக் கொன்றுள்ளார். சம்பவத்தில் 55 வயதான தாய் மற்றும் அவரது 17 வயதுடைய மகள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
தாம் கடமையாற்றும் பொலிஸ் நிலையத்தின் பிரதான வாயிலில் இரவு கடமையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கியை இந்த பொலிஸ் உத்தியோகத்தர் பலவந்தமாக எடுத்துச் சென்றுள்ளதோடு, சம்பவத்தைத் தொடர்ந்து தன்னைத் தானே சுட்டு தற்கொலை முயற்சி செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ளது.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இந்த பொலிஸ் அதிகாரி ,பிபில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் போது உயிரிழந்துள்ளார்.
சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக மொணராகலை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் இங்கினியாகலை (அம்பாறை) மற்றும் கராண்டுகல பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.