கிளப் வசந்தவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான லொகு பெட்டி எனப்படும் சுஜீவ ருவன் குமார கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பெலாரஸ் நாட்டில் வைத்து லொக்கு பெட்டி கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளப் வசந்தவை கொலை செய்வதற்கான திட்டத்தை கஞ்சிப்பானை இம்ரான் தீட்டியதாக தெரிவிக்கப்படுவதோடு, அதனை செயற்படுத்தும் பணிகளை லொக்கு பெட்டி மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை, லொக்கு பெட்டியுடன் இருந்த கஞ்சிப்பானை இம்ரான் மற்றும் ரொட்டும்ப அமில ஆகியோர் ரஷ்யாவிற்கு தப்பிச் சென்றிருந்த நிலையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் இதுவரையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்பதோடு, குற்றப் புலனாய்வு திணைக்களம் சர்வதேச பொலிஸாரிடம் இந்த விடயத்தை உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளது.
கஞ்சிப்பானை இம்ரான் மற்றும் ரொட்டும்ப அமில ஆகியோர் மாகந்துரே மதூஷுடன் துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு பின்னர் நீதிமன்றத்திலிருந்து பிணை பெற்றிருந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்தனர்.
இவர்கள் அனைவரும் பொலிஸாரால் தேடப்படும் குற்றவாளிகள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை 08ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறப்பதற்காக வந்த போது இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பாடகி கே. சுஜீவா உள்ளிட்ட நால்வர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
கிளப் வசந்த சூடு; பாடகி சுஜீவா சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்