மத்திய காசாவில் புரைஜ் மற்றும் நுஸைரத் அகதி முகாம்களில் இஸ்ரேலின் புதிய வெளியேற்ற உத்தரவை அடுத்து அங்கிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் மீண்டும் ஒருமுறை வெளியேறி வருவதோடு, லெபனானிலும் போர் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில் இஸ்ரேலின் பதில் தாக்குதல்களுக்கு தயாராகி வருவதாக அந்த நாடு தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் குன்று பகுதியில் உள்ள கால்பந்து மைதானம் ஒன்றில் விழுந்த ரொக்கெட் குண்டில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் என்று 12 பேர் கொல்லப்பட்ட நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
கடந்த ஞாயிறு பின்னேரம் கூடிய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை, லெபனான் மீதான பதில் தாக்குதல் முறை மற்றும் நேரத்தை தீர்மானிக்க, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசுக்கு அதிகாரம் அளித்துள்ளது.
இந்தத் தாக்குதலை நடத்தியதாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா குற்றம்சாட்டியபோதும் அந்த அமைப்பு அதனை நிராகரித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் எவ்வாறான நடவடிக்கையை எடுக்கும் என்பது உறுதியாகாதபோதும், அது ‘மட்டுப்படுத்தப்பட்ட ஆனால் குறிப்பிடத்தக்க வகையில் அமையும்’ என்று பெயர் குறிப்பிடாத அதிகாரிகளை மேற்கோள்காட்டி இஸ்ரேலின் மிகப்பெரிய பத்திரிகையான யெடியொத் அஹ்ரனோத் குறிப்பிட்டுள்ளது.
இதில் பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் தொடக்கம் ஹிஸ்புல்லா ஆயுதக் கிடங்குகள் அல்லது உயர்மட்ட ஹிஸ்புல்லா தளபதிகள் வரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்று அந்தப் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்கு லெபனான் நகர் ஷக்ராவுக்கு வெளியில் இஸ்ரேல் நேற்று நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டிருப்பதோடு ஒரு குழந்தை உட்பட மூவர் காயமடைந்திருப்பதாக லெபனான் சிவில் சேவை தெரிவித்துள்ளது. கோலன் குன்று தாக்குதலுக்குப் பின்னர் லெபனானில் இடம்பெற்ற முதல் உயிரிழப்புகளாக இவை உள்ளன.
லெபனானில் இருந்து வந்த ஆளில்லா விமானம் ஒன்றை மேற்கு கலீலி பகுதியில் வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலின் பதில் தாக்குதல் பற்றிய அச்சம் காரணமாக பெய்ரூட் சர்வதேச விமானநிலையத்தில் விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டு அல்லது தாமதமடைந்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் பதில் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் ஹிஸ்புல்லா அமைப்பு லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள தமது நிலைகளை மாற்றி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. ‘இஸ்ரேலின் இலக்காகக் கூடும் என்று நம்பும் தெற்கு மற்றும் (கிழக்கில்) பெகா பள்ளத்தாக்கில் உள்ள சில நிலைகளில் இருந்து ஹிஸ்புல்லா விலகியுள்ளது’ என்று அந்த அமைப்பின் நெருக்கமான வட்டாரத்தை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.
இதேநேரம் இஸ்ரேலின் வான் தாக்குதலை எதிர்பார்த்து சிரியத் தலைநகர் டமஸ்கஸின் தெற்கு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள், அதேபோன்று சிரிய கட்டுப்பாட்டு கோலன் குன்று பகுதிகளில் இருந்து ஈரான் ஆதரவுக் குழுக்கள் மற்றும் ஹிஸ்புல்லாவுடன் தொடர்புபட்ட போராளிகள் வெளியேறி வருவதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபரில் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வருகின்றபோதும் முழு அளவில் போர் ஓன்றில் ஈடுபடுவதை தவிர்த்து வருகின்றன.
இஸ்ரேலின் வடக்கு எல்லையில் போர் ஒன்றை விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அந்தோனி பிளிங்கன், இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் ஆதரவை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.
மீண்டும் மீண்டும் வெளியேற்றம்
இதேவேளை காசாவின் தெற்கு நகரங்களான கான் யூனிஸ் மற்றும் ரபாவில் வான் தாக்குதல்களின் உதவியோடு இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் டாங்கிகள் முன்னேறி வரும் நிலையில் பலஸ்தீன போராளிகளுடன் உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
குறிப்பாக கான் யூனிஸில் இருந்து பொதுமக்களை வெளியேறும்படி ஒரு வாரத்திற்கு முன் உத்தரவிட்ட இஸ்ரேலிய இராணுவம் அங்கு உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. கான் யூனிஸின் கிழக்காக அல் கரார், அல் சன்னா மற்றும் பானி சுஹைலா பகுதிகளில் டாங்கிகள் முன்னேறி வருவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரில் இன்னும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்கு வராத கிழக்குப் பகுதியை நோக்கி இஸ்ரேலியப் படை முன்னேறி வருகிறது. ரபாவின் பிரதான குடிநீர் தொட்டியை இஸ்ரேலியப் படை வெடிவைத்து தகர்க்கும் வீடியோ வெளியான நிலையில் அது தொடர்பில் விசாரணை நடத்துவதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய காசாவின் இரு அகதி முகாம்களில் உள்ள மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் கடந்த ஞாயிறன்று உத்தரவிட்டதை அடுத்து சிறுவர்கள் உட்பட அங்குள்ள மக்கள் உடைமைகளை சுமந்தபடி கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.
காசாவில் 86 வீதமான பகுதி தற்போது இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவுக்கு உட்பட்ட இடங்களாக உள்ளன என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதில் வெளியேறும் பெரும்பாலான மக்கள் கடந்த ஒக்டோபரில் போர் வெடித்தது தொடக்கம் பல தடவைகள் வெளியேற்றப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெளியேற்ற உத்தரவுகள் பலஸ்தீனர்களின் துன்பத்தை அதிகரிப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் தலைவர் பிலிப்பே லசரினி தெரிவித்துள்ளார்.
‘மக்கள் அடிக்கடி தம்மால் சேகரிக்க முடியுமானவைகளை பொதியிட்டு சில மணி நேரத்திற்குள் மீண்டும் வெளியேற ஆரம்பிக்கிறார்கள். அது பெரும்பாலும் நடைபாதையாக அல்லது தம்மால் செலவு செய்ய முடியுமான அதிகமானவர்களை நிரப்பிய கழுதை வண்டிகளாக இருக்கும்’ என்று அவர் எக்ஸ் சமூகதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் குறைந்து 39 பேர் கொல்லப்பட்டு மேலும் 93 பேர் காயமடைந்ததாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்மூலம் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 39,363 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 90,923 பேர் காயமடைந்துள்ளனர்.