தனது 3 1/2 வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை ஒருவர் எல்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (24) இரவு எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அநுருத்தகம, கரந்தெனிய பிரதேசத்தில் 3 வயதும் 6 மாதங்களுமான ஆண் குழந்தையொன்றை கொடூரமாக தாக்கப்படுவதாக 118 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் எல்பிட்டிய பொலிஸார் சந்தேகநபரை கைது செய்யதுள்ளனர்.
அதன்படி, குறித்த பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதான சமையல் பணியில் ஈடுபடும் ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரின் 24 வயதான மனைவி தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்த நிலையில், சந்தேகநபரும் குறித்த குழந்தையும் மட்டுமே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
சந்தேகநபர், குழந்தையின் கைகளை உயர்த்தி தரையில் மண்டியிட வைத்து, குழந்தை பசிக்காக உணவு கேட்கும் நிலையில், அக்குழந்தையை கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளதாகவும், குழந்தையின் காலின் மீது துவிச்சக்கர வண்டியின் சக்கரத்தை ஏற்றி இவ்வாறு கொடூரமாக நடந்து கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான தந்தை, குழந்தையை கொடூரமாக நடத்தும் குறித்த வீடியோவை வெளிநாடு சென்றுள்ள தாய்க்கு அனுப்பியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்கமைய சந்தேகநபரை கைது செய்ய எல்பிட்டிய பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.