பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு அடைவதற்கும், பாதுகாப்பு அரசத்துறை நிறுவனங்களால் (DPSUs) இறக்குமதியைக் குறைப்பதற்கும், பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பாதுகாப்பு உற்பத்தித் துறை (DDP) ஐந்தாவது சாதகமான உள்நாட்டு தயாரிப்புகளின் கொள்முதல் பட்டியலை (PIL) அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையின்படி, இந்த அண்மைய பட்டியலில் வரி மாற்று அலகுகள், முறைமைகள், உப முறைமைகள், துணை கூட்டங்கள், உதிரிப்பாகங்கள், கூறுகள் மற்றும் மூலப்பொருட்கள் உட்பட 346 மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் உள்ளன. இந்த பொருட்களின் இறக்குமதி மதிப்பு ரூ.1,048 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் இருந்து, இந்தப் பொருட்கள் இனிமேல் இந்தியத் தொழிற்சாலைகளில் இருந்து மட்டுமே வாங்கப்படும்.
இந்த நடவடிக்கை, பிரதமர் நரேந்திர மோடியின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ தொலைநோக்குப் பார்வையின் கீழ் பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவை வளர்ப்பதற்கான பாதுகாப்பு அமைச்சின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு அங்கமாகும்.
2020 இல் தொடங்கப்பட்ட SRIJAN PORTAL மற்றும் சேவைத் தலைமையகங்கள் (SHQs) உள்நாட்டுமயமாக்கலுக்கான பாதுகாப்புப் பொருட்களைப் பட்டியலிடும் தளமாக செயல்படுகின்றன. இந்த முன்முயற்சியானது பாதுகாப்புப் பொருட்களின் உள்நாட்டுமயமாக்கலில் கணிசமான முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL), பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL), பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL), BEML லிமிடெட், இந்தியா ஆப்டெல் லிமிடெட் (IOL), Mazagon Dock Shipbuilders Limited (MDL), கோவா ஷிப்யார்ட் லிமிடெட் (GSL),கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் லிமிடெட் (GRSE), மற்றும் ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (HSL), என்பன இந்த உள்நாட்டு மயமாக்கல் திட்டத்தின் கீழ் பல்வேற பொருட்களை உள்நாட்டில் தயாரிக்கும்.
இந்த அணுகுமுறை பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதோடு பாதுகாப்புத் துறையில் முதலீட்டை மேம்படுத்தும் மற்றும் இறக்குமதி சார்ந்திருப்பதைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதலாக, இது கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் வடிவமைப்பு திறன்களை அதிகரிக்கும்.
முன்னதாக, 4,666 பொருட்களை உள்ளடக்கிய பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் 2,972 பொருட்கள், இறக்குமதி மாற்று மதிப்பில் ரூ. 3,400 கோடி மதிப்புள்ளவை.இவை ஏற்கெனவே உள்நாட்டில் உற்பத்தி செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது பட்டியல் இராணுவ விவகாரத் துறையால் (DMA) அறிவிக்கப்பட்டதோடு இதில் மிகவும் சிக்கலான முறைமைகள், உணரிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளன.
உள்நாட்டுமயமாக்கலுக்கு 36,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பொருட்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 12,300 க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்நாட்டு மயமாக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக உள்நாட்டு விற்பனையாளர்களுக்கு ரூ.7,572 கோடி மதிப்பிலான உற்பத்திக்கான கொள்முதல் கிடைத்துள்ளன.