பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையில் ஸ்திரத்தன்மையை மீளக் கட்டியெழுப்புதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் உண்மையிலேயே பாராட்டக்குரியதாகும்.
இது போன்ற எதிர்கால சவால்களை இனிவரும் காலங்களிலும் எதிர்கொள்வதற்கான தலைமைத்துவத்தைத் தெரிவு செய்வதற்கு எதிர்வரும் மாதங்களில் மக்கள் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டுமென அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமரும் நிதி அமைச்சருமான ஸ்கொட் மொரிசன் தெரிவித்தார்.
கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த காலங்களில் நான் சில சந்தர்ப்பங்களில் இங்கு வந்திருக்கிறேன். அந்த காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவ்வாறு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை துறைமுகத்துக்கு விஜயம் செய்திருந்த போது அது உலகிலேயே சிறந்த துறைமுகம் எனத் தெரிவிக்கப்பட்டது.
நான் இலங்கைக்கு வந்ததற்கு மற்றுமொரு காரணம் இலங்கையர்களுடனான ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காகவாகும். இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவின் சிறந்த நண்பர்களாவர். இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் அற்புதமான மக்கள் உறவுமுறை உள்ளது. அது உண்மையானதும் கூட. இலங்கை மீது எமக்கு பாரிய நம்பிக்கை உள்ளது.
அனைத்து இலங்கையர்களையும் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் வரும் மாதங்களில் நீங்கள் மிக முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. இந்த கோரிக்கையை மக்கள் முடிவுகளை எடுப்பதில் அவுஸ்திரேலியா தலையிடுவதாக எண்ணி விடக் கூடாது. இலங்கை சிறந்த ஜனநாயக நாடு என்பதை எண்ணி அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.
பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையில் ஸ்திரத்தன்மையை மீண்டும் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் உண்மையிலேயே அசாதாரணமானவை. எனினும் அவை தைரியத்துடன் முன்னெடுக்கப்படுகின்றன. இது இலங்கை மக்களின் பெரும் தியாகங்களையும், ஜனாதிபதியின் துணிச்சலான முடிவெடுக்கும் திறனையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது.
நாட்டுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமை வகித்தமைக்கு அவருக்கு நன்றி கூறுகின்றேன். இலங்கை இன்னும் பல சாதனைகளை செய்யும். ஆனால் அதைச் செய்ய, வலுவான பொருளாதாரம் தேவை. நிலையான ஜனநாயகம் தேவை. ஆஸ்திரேலியா போன்ற நண்பர்கள் மற்றும் பங்காளிகளுடன் இலங்கை நெருக்கமாக இருக்க வேண்டும் என்றார்.