Sunday, November 24, 2024
Home » ஜனாதிபதி வேட்பாளர்கள், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள குழு

ஜனாதிபதி வேட்பாளர்கள், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள குழு

- ட்ரம்ப் தாக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் நாட்டில் இடம்பெறக் கூடாது

by Rizwan Segu Mohideen
July 17, 2024 7:02 pm 0 comment

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பிரத்தியேகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட குழுவொன்றை நியமிப்பதற்கும், அது தொடர்பான சகல பாதுகாப்பு பணிகளையும் ஒருங்கிணைக்க பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்கவும் பரிந்துரைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார பேரணியில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாக்கப்பட்ட நிலையில், இந்நாட்டில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரத்தியேகப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்தப் பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தலில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் குறித்த வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பிரத்தியேகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் இந்தக் குழுவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படைகளின் பிரதானி, பொலிஸ் மா அதிபர், தேசிய புலனாய்வுத் தலைவர் மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (தேர்தல்கள்) ஆகியோரை குழுவின் ஏனைய உறுப்பினர்களாகப் பரிந்துரைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பிரத்தியேகப் பாதுகாப்பை உறுதிசெய்வது குறித்த சகல செயற்பாடுகளையும் ஒருங்கிணைக்க பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு குறையாத பொலிஸ் அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடவும் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளை தடையின்றி ஒருங்கிணைக்க மேற்கூறிய குழுவும் நியமிக்கப்படும் பொலிஸ் அதிகாரியும், தேர்தல் ஆணைக்குழுவுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என்றும் குறித்த பரிந்துரையில் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT