முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மீது சூடு நடுத்திய துப்பாக்கிதாரியின் நோக்கம் தொடர்ந்து தெளிவில்லாமல் இருக்கும் நிலையில் அமெரிக்க மத்திய புலனாய்வாளர்கள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பென்சில்வேனியாவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பேரணியில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் ட்ரம்பின் வலது காதில் காயம் ஏற்பட்டதோடு பேரணியில் பங்கேற்றிருந்த ஒருவர் கொல்லப்பட்டு மேலும் இருவர் காயமடைந்தனர்.
ஓவல் அலுவலகத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், துப்பாக்கிதாரியின் நோக்கம் இன்னும் தெளிவாகவில்லை என்றும் அரசியல் நோக்கமுடைய வன்முறைகளை அமெரிக்கர்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதில் 20 வயதான பென்சில்வேனியாவின் பெதல் பார்க் பகுதியைச் சேர்ந்த தோமஸ் மத்தியூ குரூக்ஸ் என்ற இளைஞரே துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கிதாரியின் வீடு மற்றும் வாகனத்தில் இருந்து குண்டு தயாரிக்கும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் உள்ளூர் துப்பாக்கி சங்கம் ஒன்றின் உறுப்பினராக இருப்பதோடு உயர் பாடசாலை துப்பாக்கி குழுவில் இடம்பெற முயன்றபோதும் அது முடியாமல் போனதாகவும் முன்னாள் சக மாணவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
குரூக்கின் தொலைபேசியை புலன்விசாரணையாளர்கள் ஆராய்ந்து வருவதாக நீதித் திணைக்கள அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனார்.
சனிக்கிழமை பேரணியில் ட்ரம்ப் பேசும் இடத்தில் இருந்து சுமார் 400 அடி தூரத்தில் கூரையின் மீது குரூக்ஸை கண்டதாக அங்கிருந்த பலரும் முறையிட்டுள்ளனர். இதனை அடுத்து உள்ளூர் பொலிஸ் அதிகாரி ஒருவர் அவரை பார்க்க கூரை மீது ஏறியபோது அவர் மீது துப்பாக்கியை நீட்டியதால் அந்த அதிகாரி பின்வாங்கியதை அடுத்தே அவர் ட்ரம்ப்பை நோக்கி சூடு நடத்தி இருப்பதாக பட்லர் கௌன்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குரூக்ஸ், ட்ரம்பின் குடியரசு கட்சிக்காரர் என பதிவாகியுள்ளார். அவர் அந்தக் கட்சிக்காக நிதி உதவிகளையும் செய்திருப்பதாக தெரியவருகிறது.
குரூக்ஸ் அமைதியானவர், புத்திசாலி என்று பலரும் அவரை வர்ணிக்கின்றனர்.
சமூக ஊடகக் கணக்குகளில் அவர் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தவில்லை, அவருக்கு மனநல நோய் இருப்பதாகத் தகவல் இல்லை என்று அமெரிக்க மத்தியப் புலனாய்வுத் துறை தெரிவித்தது.
குரூக்ஸ் தனிநபராகச் செயல்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.