– செலுத்தாவிடின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
– செலுத்த 6 வருட கால அவகாசம் கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதிமன்றம் விதித்த ரூ. 100 மில்லியன் இழப்பீட்டு தொகையில் ரூ. 58 மில்லியனை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (15) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நட்டஈட்டை எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் உரிய பணத்தை செலுத்தாவிட்டால், அந்த நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளை முன்வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஏழு பேர் கொண்ட உயர் நீதிமன்ற குழு சட்ட மாஅதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆயினும் எஞ்சிய தொகையை செலுத்துவதற்கு 6 வருடகால அவகாசத்தை வழங்குமாறும் அவர் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த தொடர்பில் விடயம் விளக்கம் கோரிய நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உயர் நீதிமன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
போதிய புலனாய்வு தகவல் கிடைத்தும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறியதன் மூலம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஐவர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் கடந்த வருடம் ஜனவரி 12ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் அரச புலனாய்வு பிரிவு பிரதானி நிலந்த ஜயவர்தன, முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவு பிரதானி சிசிர மெண்டிஸ் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையின் தீர்ப்பிலேயே உயர் நீதிமன்றம் இதனை அறிவித்திருந்தது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், கத்தோலிக்க மதகுருமார்கள் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த 12 மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 பேர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 2 வருடங்களாக இடம்பற்ற விசாரணைகளின் பின்னரே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
குண்டுவெடிப்பில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த தந்தையான நந்தன சிறிமான்ன, சுற்றுலாத்துஐற வர்த்தகரான ஜனத் விதானகே மற்றும் சரத் இத்தமல்கொட உள்ளிட்ட மூன்று கத்தோலிக்க மதகுருமார்கள் மற்றும் ஷங்ரிலா குண்டுத் தாக்குதலில் காயமடைந்த சட்டத்தரணி மோதித ஏக்கநாயக்க ஆகியோர் இந்த அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஐவருக்கும் உயர் நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியது.
அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ரூ. 100 மில்லியன் அபராதம் விதித்த உயர் நீதிமன்றம், அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானி அதன் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன மற்றும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு தலா ரூ. 75 மில்லியன், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவுக்கு ரூ. 50 மில்லியன் என உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் தேசிய புலனாய்வு பிரிவு பிரதானி சிசிர மெண்டிஸுக்கு ரூ. 10 மில்லியன் நட்ட ஈடு செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை, குறித்த தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 இலட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 5 இலட்சம் இழப்பீடு வழங்குமாறு அரசாங்கத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் குறித்த இழப்பீடுகளை தீர்ப்பு வழங்கிய தினத்திலிருந்து 6 மாதங்களுக்குள் செலுத்த வேண்டுமெனவும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயர் நீதிமன்ற தீர்ப்பின் பிரதி
sc_fr_163_2019