– துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை; ஆதரவாளர் ஒருவரும் பலி
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் அவரின் காதுப் பகுதியிலேயே காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த ட்ரம்பின் ஆதரவாளர் ஒருவர் மீது துப்பாக்கி ரவை பாய்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.
சுமார் 150 யார் தூரத்தில் எதிர்முனையில் உள்ள கட்டடமொன்றின் கூரையிலிருந்து துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட துப்பாக்கிதாரியை அமெரிக்க இரகசிய சேவை பாதுகாப்புப் பிரிவினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது ட்ரம்ப் மீது மர்ம நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் இடம்பெறும் முன், இந்த மர்ம நபர் தொடர்பில் அங்கிருந்த சிலர் பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவுறுத்தியதாகவும், அதை அவர்கள் கணக்கில் கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆயினும் குறித்த மர்ம நபரை மற்றுமொரு கூரையிலிருந்த பாதுகாப்புப் பிரிவினர் இலக்கு வைத்த வண்ணம் இருப்பதை வீடியோ காட்சியொன்று காண்பிக்கின்றது.
இதேவேளை குறித்த சம்பவத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா உள்ளிட்ட பலர் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
இதுபோன்ற வன்முறைகளுக்கு அமெரிக்காவில் இடமில்லை எனவும், இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ள ஜனாதிபதி ஜோ பைடன், ட்ரம்ப்பின் உடல் நிலை சீராக இருப்பதாக தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாதுகாப்புக் கருதி ஜனாதிபதி ஜோ பைடனின் அனைத்து தேர்தல் பிரசாரக் கூட்டங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விரிவான செய்தி
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போது இடம்பெற்ற படுகொலை முயற்சியில் காதில் சுடப்பட்டார். இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலையோட்டி பெரும் பாதுகாப்பு குறைபாடாக இது பார்க்கப்படுவதோடு இந்தத் தாக்குதல் ஜனாதிபதி தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக மாறியுள்ளது.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், ட்ரம்பை அவரது பாதுகாவலர்கள் சூழ்ந்துகொண்டதோடு, விரைவில் பாதுகாவலர்களுக்கு இடையே எழுந்து நின்ற ட்ரம்ப், இரத்தம் சொட்டும் நிலையில் கையை உயர்த்தி, ‘போராடுவோம்! போராடுவோம்! போராடுவோம்!’ என்று கோசம் எழுப்பினார். ட்ரம்ப் நலமாக இருப்பதாக அவரது பிரசாரக் குழுவினர் பின்னர் அறிவித்தனர்.
இந்த படுகொலை முயற்சியில் ஈடுபட்டவராக 20 வயதான பென்சில்வேனியாவின் பெதல் சிறு நகரைச் சேர்ந்த தோமஸ் மத்தியூஸ் என்பரை எப்.பி.ஐ. பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இவர் ட்ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த வாக்காளர் என்பது மாநில தேர்தல் பதிவில் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிதாரி சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதோடு பேரணியில் பங்கேற்ற ஒருவர் கொல்லப்பட்டு மேலும் இரு பார்வையாளர்கள் காயமடைந்திருப்பதாக பாதுகாப்புச் சேவை அறிவித்துள்ளது. தாக்குதலின் நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ட்ரம்ப் கூட்டத்தின் முன் உரையாற்ற ஆரம்பித்தபோது தூப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. அப்போது அவர் தனது வலது கையால் வலது காதைப் பொத்திக்கொண்டு முழக்காலில் மண்டியிட்ட நிலையில் பாதுகாவலர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர்.
ஒரு நிமிடம் கழித்து அவர் எழுந்து நின்றதோடு, அவரது காவலர்கள் விரைவாக அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
‘நான் சுடப்பட்டதோடு துப்பாக்கி குண்டு எனது வலது காதின் மேல் பக்கத்தை துண்டாக்கியது’ என்று ட்ரம்ப் தனது ‘ட்ரூத்’ சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார். பென்சில்வேனியாவின் பட்லர் என்ற பகுதியிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பென்சில்வெனிய மாநில பொலிஸாரின் உதவியுடன் அமெரிக்க இரகசிய சேவை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் அவர் பட்லர் பகுதியில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டதோடு அவர் நியூயோர்க் ஜேர்சியில் உள்ள அவரது கொல்ப் விடுதியைச் சென்றடைந்தார்.
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறுவதற்கு நான்கு மாதங்களுக்குக் குறைவான காலம் இருக்கும் நிலையிலேயே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப், பதவியில் உள்ள ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார். கடந்த தேர்தலிலும் இந்த இருவருமே போட்டியிட்ட நிலையில் இம்முறை இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
இந்நிலையில் மில்வோக்கியில் இன்று ஆரம்பமாகும். குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் ட்ரம்ப் அந்தக் கட்சியின் வேட்பாளராக உத்தியோகபூர்வமாக தேர்வு செய்யப்படவுள்ளார்.
இந்நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு அமெரிக்க பாதுகாப்புச் சேவையின் பாதுகாப்பு குறைபாடுகள் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளன.
இந்தப் பாதுகாப்புச் சேவை ட்ரம்ப் உட்பட முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஆயுள்கால பாதுகாப்பை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
1981 இல் குடியரசு கட்சி ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் மீதான படுகொலை முயற்சிக்குப் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி அல்லது பிரதான கட்சியின் வேட்பாளர் ஒருவர் மீதான முதலாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவமாக உள்ளது.
இந்த சம்பவத்திற்கு குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் தமது கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.
‘அமெரிக்காவில் இவ்வாறான வன்முறைகளுக்கு இடமில்லை. நாம் ஒரு நாடாக ஒன்றிணைந்து இதனைக் கண்டிக்கிறோம்’ என்று ஜனாதிபதி பைடன் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
பேரணியில் பங்கேற்றிருந்த ட்ரம்ப் ஆதரவாளரான ரொன் மூஸ், நான்கு சூட்டுச் சத்தங்களை கேட்டதாகத் தெரிவித்துள்ளார். ‘கூட்டத்தினர் கீழே குணிவதும் ட்ரம்ப் மிக விரைவாக கிழே செல்வதையும் கண்டேன்’ என்றார்.
பாதுகாப்புச் சேவையால் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்ட பகுதிக்கு வெளியில் இருந்தே துப்பாக்கிச் சூடு வந்ததாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தாக்குதல் குறித்து முன்னின்று விசாரணைகளை நடத்துவதாக எப்.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது.
சந்தேக நபரால் பல தடவைகள் சூடு நடத்த முடிந்திருப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது என்று எப்.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதல்தாரியின் உடல் அவர் சூடு நடத்திய கட்டடத்தின் கூரையில் கிடக்கும் உறுதி செய்யப்படாத படங்கள் வெளியாகியுள்ளன.