துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்த கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் இறுதிக் கிரியைகள் இன்று (13) பொரளை பொது மயானத்தில் இடம்பெற்றன.
குறித்த இறுதி நிகழ்வில் அவரது நெருங்கிய உறவினர்கள் மாத்திரம் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மரணமடைந்த மாகந்துரே மதூஷின் சடலம் புதைக்கப்பட்ட கொடிகமுவ பொது மயானத்திற்கு முன்பாக, மதூஷின் புகைப்படத்துடன் வாசகமொன்றுடன் கூடிய சிறிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
(“අපේ අයියේ… එක එක්කෙනා එවනවා. අපි එනකන් බලාගන්න…”) “எங்கள் அண்ணனே ஒவ்வொருவராக அனுப்புகிறோம். நாங்கள் வரும் வரை பார்த்துக் கொள்ளுங்கள்” என, குறித்த பதாகையில் எழுதப்பட்டுள்ளது.
அத்துடன் அதன் அடியில் KPI எனவும் எழுதப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கிளப் வசந்த கொலை செய்யப்பட்ட வேளையில் மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகளிலும் KPI என எழுதப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது கஞ்சிப் பானை இம்ரானை அடையாளப்படுத்துவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாகந்துரே மதூஷ் பிரபல பாதாளக் குழு தலைவராக கருதப்படும் பல்வேறு திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கிளப் வசந்தவின் பிறந்த இடமான நுவரெலியா நகரில் இன்றையதினம் வெள்ளைக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துருகிரிய பிரதேசத்தில் கடந்த ஜூன் 08ஆம் திகதி பச்சை குத்தும் நிலையமொன்றை திறக்கச் சென்ற கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
அதற்கமைய, கிளப் வசந்தவின் சடலம் பொரளை ஜயரத்ன மலர்சாலையில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் பொரளை பொது மயானத்தில் அவரது உறவினர்களின் பங்கேற்புடன் இறுதிக்கிரியைகளை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
‘கிளப் வசந்த’ வின் இறுதிக் கிரியை; மலர்ச்சாலை பகுதியில் கடும் பாதுகாப்பு