Sunday, November 24, 2024
Home » இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி

- ரோகித், கோலி, பும்ராவுக்கு ஓய்வு

by Prashahini
July 9, 2024 4:38 pm 0 comment

நடப்பு மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது உள்நாட்டில் டெஸ்ட் உள்ளிட்ட தொடர்கள் முழுவீச்சில் தொடங்க உள்ளதால் அவர்களது பணிச்சுமையை குறைக்க விராட் கோலி, பும்ரா, ரோகித் ஆகியோருக்கு இந்தத் தொடரிலிருந்து ஓய்வளிக்கப்படுவதாக செய்தி நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் செப்டெம்பரில் பங்களாதேஷ், இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று T20 போட்டிகளில் விளையாட இந்தியாவுக்கு வருகை தருகிறது.

ஜூலை 27ஆம் திகதி தொடங்கும் இலங்கை தொடரில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 T20 போட்டிகள் நடைபெறுகின்றன.

ரோகித் சர்மாவும் விராட் கோலியும் சமீபத்திய T20 உலகக் கிண்ணத் தொடருக்கு பிறகு T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர். அதே நேரத்தில் பும்ரா, நாட்டுக்காக தொடர்ந்து விளையாடுவேன் என கூறியிருந்தார். இந்நிலையில், இலங்கைக்கு எதிரான தொடருக்காக அடுத்த வாரம் தேர்வுக் குழு கூடி அணியைத் தேர்வு செய்யும் எனத் தெரிகிறது.

இது தொடர்பாக முன்னணி ஆங்கில ஊடக நிறுவனம் ஒன்றுக்கு BCCI தரப்பிலிருந்து சொல்லப்பட்டதாக வெளியான செய்தியில், மூத்த வீரர்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு அதற்குப் பிறகான தொடர்களுக்கு தயாராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் தொடருக்குப் பிறகு நியூஸிலாந்து அணி இந்தியாவுக்கு வருகை தருகிறது. ஒக்டோபர் 16 முதல் நவம்பர் 5ஆம் திகதி வரை 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கின்றனர். பிறகு இந்திய அணி தென்னாபிரிக்கா சென்று நவம்பர் 8 முதல் 15ஆம் திகதி வரை T20 தொடரில் ஆடுகின்றனர். நவம்பர் 22ஆம் திகதி பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் அவுஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இது மிக மிக முக்கியமான டெஸ்ட் தொடர்.

BCCI இன் கிரிக்கெட் ஆலோசனைக் குழு (CAC) ஏற்கனவே தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு இரண்டு முன்னாள் வீரர்களான கவுதம் கம்பீர் மற்றும் டபிள்யூ.வி.ராமன் ஆகியோரை நேர்காணல் செய்துள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. கம்பீர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பளம் குறித்த பேச்சுவார்த்தைகளினால் அறிவிப்பு தாமதமாவதாகத் தெரிகிறது.

எப்படியிருந்தாலும் ஜெய் ஷா உறுதியளித்தது போல் இலங்கைத் தொடருக்கு முன்பாகவே அடுத்த பயிற்சியாளர், துணைப் பயிற்சியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT