– சபாநாயகர் இன்று பாராளுமன்றத்திற்கு அறிவிப்பு
இரண்டு சட்டமூலங்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சான்றுரைப்படுத்தியுள்ளதாக இன்று (09) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கமைய, இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 79ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம், 2024 ஜூலை 02 ஆம் திகதி “பெண்களின் வலுவூட்டல்” மற்றும் “யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழு” எனும் சட்டமூலங்களுக்குக் கைச்சாத்திட்டு சான்றுரைப் படுத்தியிருப்பதாக சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுக்கள்
2024 ஜூலை 02 ஆம் திகதி தனது அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட மனுவிற்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “வெளிநாட்டு தீர்ப்புக்களைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துதல்” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதி 2024.07.02 ஆம் திகதியன்றும் மேலுமொரு மனுவின் பிரதி 2024.07.04 ஆம் திகதியன்றும் தனக்குக் கிடைக்கப் பெற்றிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.
அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “குடிவரவு” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதி 2024.07.03 ஆம் திகதி கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவர் மேலும் அறிவித்தார்.