Sunday, November 24, 2024
Home » சூஃபிசத்திற்கும் தீவிரவாதத்திற்கும் நடுவில் காஷ்மீா்

சூஃபிசத்திற்கும் தீவிரவாதத்திற்கும் நடுவில் காஷ்மீா்

by Rizwan Segu Mohideen
June 29, 2024 8:03 pm 0 comment

இந்திய துணைக் கண்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள காஷ்மீர், பூவுலகினசொர்க்கம் என வா்ணிக்கப்படும் இயற்கை எழில் கொஞ்சும் பூமியாகும். கண்ணைக் கவரும் பனி மலைகள், பூக்கள் நிறைந்த பசுமையான பள்ளத்தாக்குகள், அமைதியான ஏரிகள் என பார்ப்போரை பிரம்மிக்க வைக்கக்கூடிய இயற்கை அழகுக்கு பெயா் பெற்ற இடம்தான் காஷ்மீா்.

இன்று தீவிரவாதத்தால் திணறிப் போயுள்ள காஷ்மீா், துப்பாக்கிகளின் கந்தக நெடியில் கனன்றுக் கொண்டிருக்கிறது. தீவிரவாதத்தின் தொட்டிலாக இருக்கும் காஷ்மீர் ஒரு காலத்தில் ஆன்மீகத்தின் அமைதிப் பூங்காவாக இருந்தது.

காஷ்மீா் என்ற அந்த அழகிய பூமியில் இஸ்லாமிய ஆன்மீக பரிமாணமான சூஃபித்துவம் இடம் பிடித்திருந்தது. இன, மத வேறுபாடில்லாமல் சூபித்துவ ஞானிகள் அந்த மக்களின் உள்ளங்களை ஒன்றிணைத்திருந்தனா்.

காஷ்மீரில் சூஃபித்துவத்தின் வரலாறு வளமானது, மிகவும் நீளமானது. அது, அந்த மக்களின் கலாச்சாரத்தோடும், ஆன்மீகத்தோடும், சமூகக் கட்டமைப்போடும் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. சூஃபித்துவம் காஷ்மீா் மக்களுக்கு ஆன்மீக அறிவொளியையும், கலாச்சார செழுமையையும் வழங்கியது. நல்லிணக்கத்தின் பால் அவா்களை இணைத்தது.

மோதல்களில் சிதைந்து, பிாிவினைவாதத்தில் புதைந்து போயுள்ள காஷ்மீரில், சூஃபித்துவ பாரம்பரியத்தைப் பாதுகாப்பதன் மூலமும், அது போதிக்கும் அமைதியின் போதனைகளை ஊக்குவிப்பதன் மூலமும், சமகால சவால்களுக்கு விடை தேட முடியும் என்று அந்த மக்கள் இன்றும் நம்புகின்றனா்.

பல்வேறு சூஃபி தரீக்காக்கள் காஷ்மீரில் செழித்து வளர்ந்துள்ளன. ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான போதனைகள் மற்றும் நடைமுறைகளுடன். ஆன்மீக ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை அம்மக்கள் மத்தியில் வலியுறுத்தி வந்திருக்கின்றன. சூஃபித்துவத்தின் மையக் கோட்பாடுகளில் ஒன்று “தஸவ்வுஃப்” என்ற கருத்தாகும். இது இறைவனைப் பற்றிய ஆழமான புரிதலை அடைவதற்காக இதயத்தையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்தும் செயல்முறையைக் குறிக்கிறது. சுயநலமின்மை, பணிவு மற்றும் பிறருக்கு சேவை செய்வதன் மூலம் இறைவனை நெருங்கலாம் என்று சூஃபிகள் நம்புகிறார்கள்.

சிஷ்தி, நக்ஷ்பந்தி, காதிரி மற்றும் சுஹ்ரவர்தி போன்ற தரீக்காக்கள் காஷ்மீரில் செயற்பட்டு வந்துள்ளன. பிராந்தியத்தில் சூஃபி ஆன்மீக நடைமுறைகளின் பன்முகத்தன்மைக்கும், செழுமைக்கும் இவை பங்களித்திருக்கின்றன.

14 ஆம் நூற்றாண்டில் சூஃபித்துவம் முதன்முதலில் காஷ்மீருக்கு அறிமுகமானது. மத்திய ஆசியா மற்றும் பாரசீகத்திலிருந்து பயணம் செய்த சூஃபிஸ ஆன்மீகவாதிகள் அன்பு, சகிப்புத்தன்மை ஆகியவற்றை போதனைகளாக காஷ்மீருக்குக் கொண்டு சென்றனர். அவர்கள் சூஃபி போதனை நிலையங்களை நிறுவி உள்ளூர் மக்களிடையே தங்கள் போதனைகளைப் பரப்பினர்.

காஷ்மீா் சூபி ஞானிகளில் பெயா் பெற்றவா்களாக ஷேக் நூருத்தின் நூரானி (ஷெய்க்குல் ஆலம் அல்லது நுந்த் ரிஷி என்றும் இவா் அழைக்கப்படுகிறார்). ஷேக் ஹம்ஸா மக்தூம் (மக்தூம் சாஹிப் என்று பிரபலமாக அறியப்படுபவர்), மற்றும் லல்லா அரிஃபா ஆகியோர் காஷ்மீரில் உள்ள சில முக்கிய சூஃபி ஞானிகளாக கருதப்படுகின்றனா்.

இறை காதல், ஆன்மீக ஏக்கம் மற்றும் இயற்கையின் அழகு ஆகியவற்றின் கருப்பொருளாக வைத்து இந்த சூபி ஞானிகள் காஷ்மீாி மொழியில் கவிதைகளை இயற்றியுள்ளனா். இந்த கவிதைகள் மதம் என்ற கோடுகளைக் கடந்து காஷ்மீா் மக்களுடன் தொடர்ந்தும் வாழ்ந்து வருகிறது.

இன்றும் கூட, சூஃபித்துவம் காஷ்மீரிய கலாச்சாரத்தில் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. சூஃபி ஞானிகளின் எழுத்துக்கள் கலையாகவும், பாடல், இசை, வடிவங்களாகவும் காஷ்மீா் மக்கள் மத்தியில் இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன.

சூஃபி இசை, அதன் ஆத்மார்த்தமான மெல்லிய இசையாலும், ஆன்மீக ஏக்கம் கொண்ட கவிதை வரிகளாலும், மெருகூட்டப் படுகிறது. சூஃபி இலக்கியமும், சூஃபி கவிதைகளும் காஷ்மீரி இலக்கிய மரபுகளை வளப்படுத்துவதற்கு பெரும்பங்காற்றியுள்ளன. காஷ்மீரில் சூஃபித்துவம், அரசியல் ஸ்திரமின்மை, வெளிப்புற தாக்கங்கள் மற்றும் கருத்தியல் மோதல்கள் உள்ளிட்ட பல சவால்களை அவ்வப்போது எதிர்கொண்டு வந்துள்ளது.

சமீபத்திய தசாப்தங்களில், போர்க்குணம், வெறுப்புப் பிரசாரம் மற்றும் தீவிரவாதத்தின் எழுச்சி என்பன சூஃபித்துவ ஆன்மீக நிலையங்களுக்கும், சூஃபி மரபுசார்ந்த நடைமுறைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.

எத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், காஷ்மீரில் உள்ள சூஃபி தலைவர்கள் மற்றும் அதனைப் பின்பற்றுபவர்கள் அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் ஆன்மீக மேன்மை ஆகியவற்றின் மதிப்புகளை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றனர். பல்வேறு சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்க இவா்கள் உழைத்து வருகின்றனர்.

இருப்பினும், சமீபத்திய தசாப்தங்களில், காஷ்மீரில் தீவிரவாத சிந்தனைகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. சூஃபித்துவத்தின் அமைதியான போதனைகளுக்கு எதிராக பயங்கரவாதக் குழுக்களின் வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றன.

காஷ்மீரில் பிராந்திய அரசியல் சக்திகளால் உருவாக்கப்பட்டு, அம்மக்கள் மத்தியில் ஏவிவிடப்பட்டுள்ள கொடிய தீவிரவாதம் அப்பகுதியை மோதல்களின் மொத்த வடிவமாய் மாற்றியிருக்கிறது. இந்த மோதல்கள் காரணமாக, பல தசாப்தங்களாக காஷ்மீரில் சமூக அமைதிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு சவால்கள் ஏற்பட்டுள்ளது.

சூஃபித்துவத்தின் போதனைகள் மன அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் இரக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. வரலாற்று ரீதியாக காஷ்மீரில் சூஃபி ஞானிகளின் போதனைகள் ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வின் செய்தியை மக்களுக்குக் கொண்டு சென்று காஷ்மீரை அமைதியின் பூங்காவாக மாற்றியிருந்தனா்.

ஆனால், இன்றோ அதன் நிலைமை முற்றாக மாற்றப்பட்டு இருக்கிறது. பூவுலகின் சொர்க்கம் என்று புகழப்படும் அந்த அழகிய பூமிக்கு தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்த பிராந்திய அரசியல் சக்திகள் அந்த பூமியை சுடுகாடாக மாற்றி வருகின்றனா். அன்பையும், இரக்கத்தையும், நேசத்தையும் போதித்து வந்த அந்த பூமியை பயங்கரவாதம் மற்றும் மோதல்கள் நிறைந்த பூமியாய் மாற்றி வருகின்றனா்.

ஒட்டுமொத்தமாக, காஷ்மீரில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பயங்கரவாதம், அன்பு, கருணை, நல்லிணக்கத்தைப் போதித்து வந்த சூஃபிசத்திற்கும் பெரும் சவாலாக கருதப்படுகிறது. தீவிரவாதம் காஷ்மீரி சமூகத்தின் அடித்தளத்தை ஆழமாக அசைத்துள்ளது. சூஃபிஸத்தின் மதிப்புமிக்க அடிப்படைகளான அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் ஆன்மீக அறிவொளி ஆகியவற்றுக்கு சவால் விடுகிறது.

இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், காஷ்மீா் புத்திஜீவிகள் தனது மண்ணில் இழந்து போன அன்பையும், கருணையையும், நல்லிணக்கத்தையும் மீண்டும் உயிர்ப்பிக்க தொடர்ந்தும் பாடுபட்டு வருகின்றனா்.

சபா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT