இலங்கையில் சமீப காலமாக எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பெரும்பாலும் இளவயதினரே எச்.ஐ.வி தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்களைப் பார்க்கிலும் ஆண்கள் மத்தியிலேயே எய்ட்ஸ் தொற்று அதிகமாக உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரையில் மேல்மாகாணத்திலேயே எய்ட்ஸ் தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. விபசாரம் மற்றும் தன்பாலின சேர்க்கை ஆகியவையே எய்ட்ஸ் தொற்றுப் பரவலுக்கான முக்கிய காரணங்களாகும்.
எச்.ஐ.வி தொற்று நிலைமை இவ்வாறு அதிகரித்து வருவது ஆரோக்கியமானதல்ல. எமது எதிர்கால சந்ததியினரையே பாழாக்கி விடக் கூடிய ஆபத்து உள்ளதால், எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.
சட்டத்தினாலோ அல்லது பலவந்தமான நடவடிக்கைகளாலோ எய்ட்ஸ் தொற்று பரவுவதை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது. மக்கள் மத்தியில் அதிகளவான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
எச்.ஐ.வி வைரஸ் எவ்வாறு ஒருவரில் இருந்து மற்றவருக்குத் தொற்றுகின்றது? இத்தொற்றினால் மக்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் எவை? எய்ட்ஸ் தொற்றிலிருந்து மக்கள் எவ்வாறு பாதுகாப்புப் பெறலாம்?
இவ்வாறான சந்தேகங்களுக்கு போதுமான தெளிவு ஏற்படுமானால் எச்.ஐ.வி தொற்றில் இருந்து மக்கள் பாதுகாப்புப் பெறுவதற்கு வழியேற்படும்.
எச்.ஐ.வி தொற்று ஒருவருக்கு ஏற்படுவதற்கு பின்வருவன காரணங்களாக அமையலாம். அதாவது பொதுவாக நான்கு வழிகளில் இந்தத் தொற்று ஒருவருக்கு ஏற்படுகின்றது. பாதுகாப்பற்ற உடலுறவு, மருத்துவ சிகிச்சை அல்லது ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் தொற்று ஏற்பட்ட ஊசிகள் மற்றும் இரத்த மாற்றீடு, தாய்ப்பால், குழந்தை பிறப்பின்போது தாயிலிருந்து சேய்க்கு பரவுதல்.
இவை நான்குமே பிரதான காரணங்களாக அமைவதால் மக்கள் ஒவ்வொருவரும் எய்ட்ஸ் தொற்றில் இருந்து அவதானமாக இருத்தல் அவசியம்.
எய்ட்ஸ் என்பது மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (எச்.ஐ.வி) தொற்று ஆகும். இது தொற்றுநோயால் ஏற்படும் ஒரு தீவிரநிலை ஆகும். இது ஒரு நபரின் நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் நோய்க்கு எதிராக போராடும் திறனை சேதப்படுத்துகிறது.
எய்ட்ஸ் தொற்றுக்கு உள்ளாகும் நபரின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்த பல ஆண்டுகள் எடுக்கும். எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சை இல்லை என்றாலும், மருந்துகள் நோயின் வளர்ச்சியை குறைக்க உதவும்.
எய்ட்ஸ் வைரஸ்கள் CD4 கலங்களை (ஒரு வகை வெள்ளை இரத்த அணுக்கள்) சேதப்படுத்துகின்றன. வெள்ளை இரத்த அணுக்கள் நோய்க்கு எதிராகப் போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எச்.ஐ.வி வைரஸ் இந்த CD4 செல்களைக் கொன்று ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது.
எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர், வைரஸ் தாக்கிய இரண்டு மாதங்களுக்குள் சளி, காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி, தொண்டைப்புண் மற்றும் சுரப்பிகள் வீக்கத்தால் பாதிக்கப்படலாம். பெரும்பாலும் ‘முதன்மை அல்லது கடுமையான எச்ஐவி தொற்று’என்று இது குறிப்பிடப்படுகிறது. இது கவனிக்கப்படாமல் போகலாம். ஆனால் இந்த கட்டத்தில் வைரஸ் வேகமாகவும் திறமையாகவும் பரவுகிறது.
சில சந்தர்ப்பங்களில், நாள்பட்ட எச்.ஐ.வி நிலையில் நிணநீர் சுரப்பிகளின் தொடர்ச்சியான வீக்கத்தால் ஒரு நபர் பாதிக்கப்படுகிறார். இந்த நிலை கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் நீடிக்கும். நபர் அன்டிரெட்ரோவைரல் மருந்தை உட்கொண்டால், பல தசாப்தங்களாக இந்த கட்டம் தொடரலாம்.
வைரஸ் மேலும் வளர்ச்சியடைந்து நோயெதிர்ப்பு மண்டலத்தை தொடர்ந்து சேதப்படுத்துவதால், ஒரு நபர் காய்ச்சல், சோர்வு, எடை இழப்பு, வாய்வழி ஈஸ்ட் தொற்று, வயிற்றுப்போக்கு மற்றும் சிங்கிள்ஸ் ஆகியவற்றால் பாதிக்கப்படலாம்.
எய்ட்ஸ் நோயிலிருந்து பாதுகாப்புப் பெறுவதாயின் பாலியல் ஒழுக்கமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதே முதலில் பிரதானமாகும். உலகின் அனைத்து நாடுகளிலும் எய்ட்ஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் கூடுதலானோர் தவறான பாலியல் தொடர்பு காரணமாகவே இந்நிலைமைக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தொற்றின் ஆபத்தைப் புரிந்து கொள்ளாதவர்களாக அவர்கள் இந்நிலைமைக்கு ஆளாகி, தங்களது எதிர்காலத்தையே பாழாக்கிக் கொண்டுள்ளனர். பாலியல் ஒழுக்கம் மாத்திரமன்றி, மருத்துவ சிகிச்சையில் ஏற்படும் தவறுகள் குறித்தும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
மனித வாழ்வின் மகிழ்ச்சியும் நிம்மதியும் நோயற்ற வாழ்விலேயே உள்ளன. எனவே எச்.ஐ.வி தொற்றின் அபாயம் குறித்து முழுமையான விழிப்புணர்வு கொள்வது அவசியமாகும்.