Thursday, October 31, 2024
Home » பயங்கரவாத தடுப்புச் சட்டமும் இந்திய – இலங்கை சிறுபான்மை சமூகங்களும்

பயங்கரவாத தடுப்புச் சட்டமும் இந்திய – இலங்கை சிறுபான்மை சமூகங்களும்

by Rizwan Segu Mohideen
June 28, 2024 10:24 am 0 comment

“எனது தடுப்புக் காவலின் துயரநிலை எனது மரணம் வரை தொடரும்” என இலங்கைப் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் பிழையான முறையில் குற்றஞ்சாட்டப்பட்டு பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்தார். குறித்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிழையான முறையில் குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக பல்வேறுபட்ட அறிக்கைகள் சுட்டி காட்டுகின்றன. 71 வயதான செல்லையா இராசையா என்பவர், அவர் புரியாத குற்றமொன்றுக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட தனது சொந்த அனுபவத்தை மீள நினைவுகூருகின்றார். அவர் 1987 ஆம் ஆண்டு ஆணையிரவு இராணுவ முகாமின் சோதனைக் காவலரன் ஒன்றில் வைத்து தமிழீழ விடுதலை புலிகளின் ஓர் உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். இந்த வதை முகாமில் ஐந்து நாட்கள் வைக்கப்பட்ட பின்னர், அவர் வவுனியா ஜோசப் முகாமிற்கு மாற்றப்பட்டார். “நான் வவுனியா ஜோசப் முகாமில் இரண்டு வாரங்களாக கடுமையான விசாரணை மற்றும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டேன்” என அவர் குறிப்பிடுகின்றார்.

“தடுப்புக் காவலில் இருந்து என்னை விடுவிப்பதற்கு கடுமையாக உழைத்த எனது மனைவியினதும் எனது திணைக்களத் தலைவரினதும் முயற்சிகள் இருந்திருக்காவிட்டால் நான் இன்னும் சிறையில் இருந்திருப்பேன்” என அவர் தனது வலிகளை மீள நினைவு கூறுகின்றார். சிறையிலடைக்கப்படும் போது, இராசையா கிளிநொச்சியிலுள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தராக இருந்தார்.

“நான் விடுவிக்கப்பட்ட பின்னர், ஒரு ஆண்டு காலமாகத் தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சை பெற்றேன்,” என மிகவும் ஆழ்ந்த கவலையுடன் அவர் அதனை நினைவு கூருகின்றார் “பல ஆண்டுகளின் பின்னர் கூட, எனது தலையிலுள்ள வீக்கமும் சித்திரவதையின் வடுக்களும் மாறவில்லை.”

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் (PTA) ஏராளமான அப்பாவி மக்கள் அநியாயமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என ஒருபோதும் முறையாக அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை. நானும் அவர்களில் ஒருவராக இருக்கின்றேன் என உறுதியாக நம்புகின்றேன்.”

பயங்கரவாத தடைச் சட்டம் இலங்கையில் மிக நீண்ட காலமாக காணப்படுகின்ற சட்டங்களில் ஒன்றாகும். இலங்கையின் கடலுக்கப்பால் இந்தியாவில், சட்டவிரோத செயற்பாடுகள் தடைச் சட்டம் (UAPA) பயங்கரவாத செயற்பாடுகளை வேருடன் களைவதற்காக காணப்படுகின்ற இந்தியாவின் மிகக் கடுமையான சட்டமாக கருதப்படுகின்றது. 1967 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இப்பயங்கரமான சட்டம் தேச விரோத மற்றும் பிரிவினைவாத செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக முதலில் பயன்படுத்தப்பட்டது. குறித்த சட்டம் அதன் தற்போதைய வடிவத்தில் சட்டவிரோத செயற்பாடுகளையும் பயங்கரவாத செயல்களையும் வேருடன் களைவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.

அப்பதங்களின் வரைவிலக்கணம் தெளிவற்றதாகவும் பரந்ததாகவும் காணப்படுகின்றது. இந்தியாவின் ஆள்புல எல்லையின் பிரிவு அல்லது பிரிவினை அல்லது அதன் இறையாண்மைக்கு இழிவினை ஏற்படுத்துதல் சட்டவிரோதமானதாக முத்திரை குத்தப்படுவதுடன், இந்தியாவின் ஆள்புல எல்லை, ஐக்கியம், உறுதிப்பாட்டுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் பயங்கரவாத செயல்களாக வரைவிலக்கணம் செய்யப்படுகின்றன.

இந்தியா பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களின் மூலம் சுமைக்கு உட்படுத்தப்பட்டும் ஊறுவிளைவிக்கப்பட்டுமிருக்கின்றது. இக்காரணம் சட்டவிரோத செயற்பாடுகள் தடைச் சட்டத்தின் (UAPA) அமுலாக்கத்தில் கண்மூடித்தனமான தன்மையை நியாயப்படுத்தியிருக்கின்றது. “பயங்கரவாத சட்டங்கள் கடுமையானதாகவும் பயங்கரமானதாகவும் காணப்படுகின்றன. அவைகள் பொலிசாருக்கு அதிகளவு அதிகாரங்களை வழங்குகின்றன. அத்துடன் பொலிசார் அதிகாரங்களை தவறான முறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்”, என 2006 ஆம் ஆண்டு மும்பாய் புகையிரதக் குண்டு வெடிப்புகளில் சம்பந்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு தவறாக சிறையில் 9 ஆண்டுகள் கழித்த ஓர் பாடசாலை ஆசிரியர் அப்துல் வாஹித் சைக் என்பவர் குறிப்பிடுகின்றார்.

“நான் பம்பாய் பொலிசாரில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். எனது கைது ஓர் கொலை வழக்குடன் தொடர்புபட்டு இருந்ததாக குறிப்பிட்டு அவர்கள் என்னை ஆரம்பத்தில் இருட்டில் வைத்தார்கள். சிறைக்குச் செல்லும் வரை, எனது கைதுக்கு பின்னால் உள்ள காரணம் எனக்கு தெரிவிக்கப்படவில்லை.” நீதி கிடைக்கப் பெறுவதற்கு முன்னர் 9 ஆண்டுகளை சிறையில் கழித்திருந்த அவர், ஒரு தடவை ஆதார் வீதி சிறையில் உதவிமிக்க சக சிறைக் கைதி ஒருவரை கண்டு கொண்டார்.

சிறை கைதிகளில் ஒருவர் சாயி, பிஸ்கட்டுகள், ரைம்ஸ் ஒப் இந்தியா (Times of India) எனும் பத்திரிகையின் ஓர் பிரதி என்பனவற்றை சைக்குடன் பகிர்ந்தார். “குறித்த பத்திரிகை எங்களது பெயர்களையும் கதையையும் கொண்டிருந்தது. அது பயங்கரவாத சட்டத்தின் கீழ் நாங்கள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக காண்பித்தது.” இப்பொழுதுதான் பொலிசார், சட்டம், மற்றும் நீதி முறையில் அவருக்கு இருந்த நம்பிக்கை சுக்குநூறாகியது.

பயங்கரவாத சட்டங்களின் தோற்றம்

இலங்கை
இலங்கையினது பயங்கரவாத சட்டங்கள் அவசரகால அதிகாரங்களை வழங்குகின்ற 1947 ஆம் ஆண்டின் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்திலிருந்து தோற்றம் பெற்றது. குடியியல் பாதுகாப்புக் கட்டளைச்சட்டம் கிளர்ச்சிக்கு எதிராக பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரங்களை வழங்கிய அதேவேளை அவசரகாலச் சட்டமானது பயங்கரவாதத்தை இலக்கு வைத்தது. 1978 ஆம் ஆண்டில் அதிகரித்து வரும் கிளர்ச்சிக்கு மத்தியில், தடைச் சட்டமானது பயங்கரவாதத்திற்கு எதிரான முதலாவது அடித்தளத்தை இடுகின்ற வகையில் எல்ரீரீஈ (LTTE) போன்ற குழுக்களைத் தடை செய்தது. 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) முந்திய சட்டத்தை மாற்றீடு செய்ததுடன் உள்நாட்டு முரண்பாடுகள் மற்றும் பாதுகாப்பு சவால்களுக்கு இலங்கையின் தற்போதைய பதிலை பிரதிபலிக்கும் வகையில் இன்னும் வலுவில் காணப்படுகின்றது.

இந்தியா
1969 ஆம் ஆண்டில் சட்டவிரோத செயற்பாடுகள் தடைச் சட்டத்துக்கு (UAPA) முன்னர் இந்தியா வேறு இரண்டு பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களை கொண்டிருந்தது. முதலாவது 1985 ஆம் ஆண்டின் பயங்கரவாத மற்றும் சீர்குலைப்பு செயற்பாடுகள் தடைச் சட்டம் (Terrorist and Disruptive Activities (Prevention) Act) ஆகும். பயங்கரவாத மற்றும் சீர்குலைப்பு செயற்பாடுகள் தடைச் சட்டத்தின் (TADA) 95 வீதமான TADA விசாரணைகள் விடுவிப்புகளுடன் முடிவடைந்தன. பின்னர், 2002 ஆம் ஆண்டில் பயங்கரவாத தடைச் சட்டம் (Prevention of Terrorism Act – POTA) வந்தது. பயங்கரவாத தடைச் சட்டம் POTA தடைக்கான தடுப்புக்காவல் தெரிவு எதுவுமின்றிய பயங்கரவாத மற்றும் சீர்குலைப்பு செயற்பாடுகள் தடைச் சட்டத்தின் (TADA) கடுமையான அம்சங்களை எடுத்திருந்தது.

“பயங்கரவாத மற்றும் சீர்குலைப்பு செயற்பாடுகள் தடைச் சட்டத்தின் (TADA) கீழ் பல சீக்கியர்களும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் (POTA) கீழ் குறிப்பிட்ட எண்ணிக்கையான முஸ்லிம்களும் தடுத்து வைக்கப்பட்ட அதேவேளை, இரண்டு சட்டங்களும் தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிராக உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் விரிவாக பயன்படுத்தப்பட்டன” என மனித உரிமைகள் அவதாணிப்பு நிறுவனத்தின் பிரதி ஆசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி குறிப்பிடுகின்றார்.

பயங்கரவாத மற்றும் சீர்குலைப்பு செயற்பாடுகள் சட்டம் (TADA), பயங்கரவாத தடைச் சட்டம் (POTA) ஆகிய இரண்டினதும் பல கடுமையான அம்சங்களை சட்டவிரோத செயற்பாடுகள் தடைச்சட்டமானது (UAPA) எடுத்திருக்கின்றது. புதிய பாரதிய நியாய (இரண்டாவது) சங்கித 2023 (Bharatiya Nyaya (Second) Sanhita 2023) சிறிது நம்பிக்கையை வழங்குகின்றது. “தண்டனைச் சட்டக் கோவைக்கான சீர்திருத்தங்கள் குடியேற்றகால சட்ட ஏற்பாடுகளை அகற்றும் பொருட்டு அவசியமானவையாக காணப்பட்டன. ஆனால், குறித்த பெயரை சாதாரனமாக மாற்றுவது போதுமானதாக காணப்படவில்லை. மாறாக, அது சர்வதேச மனித உரிமைகள் நியமங்களை திருப்தி செய்யும் பொருட்டு திருத்தப்பட வேண்டும்” என கங்குலி ஏற்றுக்கொள்கின்றார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை
2022 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஓர் RTI அறிக்கையின்படி, 2019.01.01 ஆந் திகதியிலிருந்து 2021.11.20 ஆந் திகதி வரையான காலப் பகுதியில், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 22 பெண்கள் உட்பட 317 சந்தேக நபர்களைக் கைது செய்தது. மேலும் அதே காலப்பகுதியில், 10 பெண்கள் உட்பட 342 நபர்கள் இலங்கையின் ஏனைய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 07 பெண்கள் உட்பட 29 சந்தேக நபர்கள் குற்றப்பத்திரம் எதுவும் தாக்கல் செய்யப்படாமல் விடுதலை செய்யப்பட்டனர்.

2024 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட RTI அறிக்கையின்படி பயங்கரவாத எதிர் மற்றும் விசாரணைப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவல் பின்வருமாறு காணப்படுகின்றது.

2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2024.05.13 ஆந் திகதி வரையான காலப் பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள்

  • சிங்களவர் 125
  • தமிழர் 429
  • முஸ்லிம் 307
  • ஏனையவர்கள் 07
  • மொத்தம் 868

2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2024.05.13 ஆந் திகதி வரையான காலப் பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களின் விபரங்கள்

  • சிங்களவர் 58
  • தமிழர் 279
  • முஸ்லிம் 227
  • மொத்தம் 564

இந்தியாவின் தேசிய குற்றப் பதிவுகள் பணியக (NCRB) இந்தியாவிலுள்ள குற்றம் எனும் பிரிவு 2014 ஆம் ஆண்டில் சட்டவிரோத செயற்பாடுகள் தடைச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்ட வழக்குகளின் அறிக்கையிடலை ஆரம்பித்தது. 2014 – 2022 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், 8719 சட்டவிரோத செயற்பாடுகள் தடைச்சட்ட (UAPA) வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் 14,805 நபர்கள் கைது செய்யப்பட்டனர். 2019 – 2021 ஆம் ஆண்டு காலப் பகுதியில், 4890 நபர்கள் சம்பந்தப்பட்ட 2836 வழக்குகள் குற்றத்தாக்கல் செய்யப்பட்டன. 82 வழக்குகள் குற்றப் பகர்வு செய்யப்பட்டதுடன் 222 வழக்குகள் குற்றப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டன அல்லது விடுதலை செய்யப்பட்டன. 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சராசரி குற்றப்பொறுப்பு வீதம் 29.06 ஆக காணப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டில் 3999 வழக்குகள் இன்னும் நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்கின்றன.

ஆண்டு புதிய வழக் குகள் கைது
செய் யப்பட்ட நபர்கள்
நிலுவை யிலுள்ள வழக்கு
கள்
குற்றப்
பொறுப் பளிக்கப்
பட்ட
வழக்குகள்
விடு
விக்கப்
பட்ட
வழக்குகள்
குற்றப்
பொறுப்பில்
இருந்து
விடுவிக்கப்
பட்ட வழக்கு
கள்
2022 1005 2632 3999 36 9 153
2021 814 1621 3998 27 2 39
2020 796 1321 4021 22 2 99
2019 1226 1948 3993 33 16 64
2018 1182 1421 3905 34 23 68
2017 901 1554 3920 34
2016 922 999 3548 11
2015 897 1128 3040 11
2014 976 2181 2549

மூலம் – இந்தியாவிலுள்ள குற்றம் (2014 – 2022)

கவிஞர்கள் மற்றும் ஆசிரியர்களை கைதிகளாக்குதல்
2019 ஆம் ஆண்டில் இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன், பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தனர். அதேவேளை, பல பத்திரிகையாளர்களும் கவிஞர்களும் பயங்கரவாத எதிர்ப்பின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹ்னாப் ஜெசீம் என்பவர் அத்தகைய நபர்களில் ஒருவர். கவிஞரும் ஆசிரியருமானாக அஹ்னாப் ஜெசீம் சுமார் ஒரு ஆண்டுக்கும் அதிகமான காலப்பகுதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிழையான முறையில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த சூழ்நிலையில், அஹ்னாப் ஜெஸீம் (28) பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக காணப்படுகின்றார். அவர் ஓர் இளம் கவிஞராவார். அவர் தனது ‘நவரசம்’ எனும் கவிதைப் புத்தகத்தினூடாக சிறுவர்களுக்கு அடிப்படைவாத எண்ணக் கருக்களைப் பரப்பி கடும்போக்கு சிந்தனைகளை போதித்தார் எனும் குற்றச்சாட்டின் கீழ் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் 2021 ஆண்டு டிசம்பர் மாதத்தில் விடுதலைசெய்யப்பட்டார்.

இது தொடர்பில், அவருடைய கவலைகள் இவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றன. “எனது பெயர் அரசாங்கப் பயங்கரவாத பட்டியலில் காணப்படுகின்றது. இதன் காரணமாக, நான் எத்தகைய தொழில்களையும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். அத்துடன், நான் ஒரு அரசாங்கத் தொழிலைக் கூட பெறமுடியாத நிலையில் இருக்கின்றேன். தனியார் துறையினர் கூட எனக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்கு அச்சப்படுகின்றார்கள். நான் ஒரு தொழிலைத் தேடி வெளிநாட்டுக்குக் கூட செல்லமுடியாத நிலையில் இருக்கின்றேன். எனது வழக்கு தீர்க்கப்பட்டிருப்பினும் கூட, நான் இந்த பிரச்சினையிலிருந்து என்னை பூரணமாக விடுவித்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றேன்,” என அஹ்னாப் ஜெசீம் கவலையுடன் கூறுகின்றார்.

“நான் 2020.05.16 ஆம் திகதியன்று வவுனியா பயங்கரவாதப் புலன் விசாரணைப் பிரிவினரால் (TID) கைது செய்யப்பட்டேன். எனது கைதுக்கான காரணங்கள் ‘நவரசம்’ எனும் எனது கவிதைப் புத்தகத்தின் உள்ளடக்கமே என பயங்கரவாத புலன் விசாரணை பிரிவினரால் கூறப்பட்டது. நான் பயங்கரவாதத்தைத் தூண்டி பயங்கரவாதத்தை ஊக்குவித்து எழுதினேன் எனவும் நான் அதனை அச்சிட்டு வெளியிட்டு நாடு முழுவதும் கடும்போக்கான எண்ணக்கருக்களை பரப்பினேன் எனவும் அவர்கள் நினைக்கின்றார்கள். நான் எனது கைதுக்கு முன்னர் திருமணம் செய்ய இருந்தேன். எனது கைதின் பின்னர், நான் பயங்கரவாதத்தில் ஈடுபட்டேன் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் எனது திருமண முன்மொழிவை முறித்தார்கள். சமூகம் கூட என்னை சந்தேகக் கண்கொண்டு பார்த்தது. எனது குடும்பத்தினர்கள் கூட அச்சமுற்றிருந்தார்கள். இந்நிகழ்வு எனது கல்வியையும் குடும்ப வாழ்க்கையும் கடுமையாக பாதித்தது.” என அவர் மேலும் கூறுகின்றார்.

“நான் பயங்கரவாத அமைப்புகளுடன் எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை. அத்துடன், புரிந்திருக்காத ஒரு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டேன். எனவே, அது தெளிவாகவே அரசியல்ரீதியாக ஊக்குவிக்கப்பட்ட ஓர் கைதாக இருந்தது.” என தனது கவலையை அவர் வெளிப்படுத்தினார். அவர் அத்தகைய பயங்கரவாத முத்திரை இடப்பட்ட குற்றங்களிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு வழியமைத்து சுதந்திரமாக வாழ்வதற்கு அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும் என அவர் முறையிட்டார் “நான் குற்றமற்று இருந்தேன் என உண்மையாகவே நம்புகின்றேன். நீதி இலங்கையில் செத்து விடவில்லை. நான் விடுவிக்கப்பட்டுள்ளேன் என்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.” என தனது கவலையை அஹ்னப் ஜெசீம் (28) தெரிவித்தார்.

2006 ஆம் ஆண்டு மும்பாய் குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய 13 பேர் கைது செய்யப்பட்டனர். சைக் மகாராஷ்டிரா ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றச்செயல் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (MCOCA) கீழும் சட்டவிரோத செயல்களைத் தடுப்பதற்கான சட்டமான (UAPA) தேசிய பயங்கரவாத சட்டத்தின் கீழும் குற்றம் சாட்டப்பட்டார். இரண்டு பயங்கரவாத சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டப்படுவது எவ்வளவு சட்டவிரோதமானது என அவர் நினைவுபடுத்துகின்றார். தனது சிறைத் தண்டனைக் காலத்தை அறிந்திருக்கின்ற குற்றப்பொறுப்பளிக்கப்பட்ட கைதி போலல்லாது குற்ற பொறுப்பளிக்கப்படாத கைதி சிறையிலிருக்கின்ற காலப்பகுதி தொடர்பில் எத்தகைய எண்ணத்தையும் கொண்டிருப்பதில்லை.

“கீழ்விசாரணைக் காலம் 14 நாட்கள் நீடிக்கின்றது. 14 நாட்களின் முடிவில், ஓர் அற்புதம் இருக்கும் என நான் நம்பி இருந்தேன். நான் பிணையைப் பெற்றிருப்பேன் அல்லது மீள்குற்றச்சாட்டை பெற்றிருப்பேன்.” காத்திருக்கும் நீதிப் பெறுபேற்று வட்டம் சைக்குக்கு 9 ஆண்டுகள் நீடித்தது. இக்காலப் பகுதியில், சைக் பொலிசாரின் முதல் நிலை மிருகத்தனத்தை அவதானித்தனர். அவர் “அப்பாவிக் கைதிகள்” எனும் தனது புத்தகத்தில் தனது அனுபவங்களை ஆவணப்படுத்தி உள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்ட 13 நபர்களில், சைக் மாத்திரமே 2015 ஆம் ஆண்டில் அவருடைய குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரது விடுவிப்பின் பின்னர், அவரைப் போன்று பிழையான முறையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு சட்டரீதியான மற்றும் நிதி உதவியை வழங்கும் நோக்குடன் 2016 ஆம் ஆண்டில் குற்றமற்றோருக்கான வலையமைப்பை இனணயமைப்பாக உருவாக்கினார். “பல அப்பாவிகள் இன்னும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் என நான் உணர்ந்துள்ளேன். எனவே, சில செயற்பாட்டாளர்களும் சட்டத்தரணிகளும் நானும் 2016 ஆம் ஆண்டில் அவர்களுக்கு சட்ட மற்றும் ஏனைய உதவிகளை வழங்கி உதவும் பொருட்டு ஒன்றிணைந்தோம்.”

நீதிமன்றத்தினால் குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பினும், பொலிசார் பிழையாக குற்றஞ்சாட்டப்பட்டவரின் வாழ்க்கையில் தொடர்ந்து இடையீடு செய்து கொண்டிருக்கின்றனர். பொலிசார் இன்னும் அவர்களை சந்தேகத்துடனே பார்ப்பதுடன், விசாரணைக்காக அவர்களை அழைப்பதுடன் அவர்களது இடங்களில் தேடுதல் கூட நடத்துகின்றனர் என சைக் குறிப்பிடுகின்றார். கடந்த ஆண்டு குறித்த NIA தேடுதல் ஆணை எதுவுமின்றி அதிகாலை 5 மணியளவில் அவரது வீட்டில் தேடுதல் நடத்துவதற்கு எவ்வாறு தீர்மானித்தனர் என்பதை மீளநினைவுக்கு கொண்டுவருகின்றார். தேடுதல் ஆணை எதுவுமின்றி அவரது வீட்டின் உள்ளே தேடுதல் நடத்துவதற்கு அவர்களை அனுமதிக்க மறுத்ததன் பின்னர் ஓர் தேடுதல் ஆணை 6 மணித்தியாலங்களின் பின்னர் சமர்ப்பிக்கப்பட்டது. பிற்பகல் 5 மணியளவில் தேடுதல் முடிவடைந்த போது அதிகாரிகள் சைக்குக்கு எதிரான எத்தகைய சான்றினையும் கண்டுபிடிக்கவில்லை.

பயங்கரவாதத்திற்கு எதிரான குடியேற்ற காலச் சட்டங்களை திருத்துவதற்கு சீர்திருத்தங்கள் அவசியமாக காணப்பட்டன என கங்குலி குறிப்பிடுகின்றார். இச்சட்டங்களின் தற்போதைய உண்மைநிலை அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கு கடுமையானதாக காணப்படுகின்றது. மனித உரிமைகள் நிபுணர்கள் பயங்கரவாத சட்டங்களை ரத்து செய்வதற்கு தொடர்ச்சியாக அழைப்பு விடுத்துள்ளனர்.

அஹ்னாப் ஜெஸீம் மற்றும் அப்துல் வாகித் சைக் போன்று இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள பலர் அதேபோன்ற உளவியல் தாக்கத்திற்கும் பாதுகாப்பின்மைக்கும் ஆட்படுகின்றனர். அது போன்று, அவர்கள் தங்களை சமூகத்தினுள் மீள ஒருங்கிணைப்பதில் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். சந்தேகத்தின் பேரில் நீதிநெறியற்ற முறையில் கைது செய்யப்பட்டுள்ள பலர் பொருளாதார பிரச்சினைக்கு மத்தியிலும் அவர்களது குற்றமற்ற தன்மையை நிரூபிப்பதற்கான வழக்குச் செலவு போன்ற பல்வேறு அம்சங்களில் நிதி ரீதியான கஷ்டங்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர்.

சிறுபான்மையினரை இலக்கு வைத்தல்
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இலங்கையில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான ஓர் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட சட்டமாகும். அந்த வகையில் 95 வீதத்திற்கு மேற்பட்ட கைதுகள் தவறான முறையில் முயற்சிக்கப்படுகின்றன. பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஆரம்பத்தில் எல்ரீரீஈ மற்றும் ஏனைய பிரிவினைவாத குழுக்களுடன் இணைந்திருக்கின்ற தமிழர்களை தன்னிச்சையாக தடுத்து வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. அது அண்மையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எரிபொருளை வழங்கியுள்ள ஊழலுக்கு எதிராக சண்டை இடுகின்ற மாணவர்களை தடுத்து வைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் இலங்கையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இச்சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தொழில்சார் நிபுணர்களின் தரவு மற்றும் அபிப்பிராயங்களின் ஊடாக அது வெளிப்படுத்தப்படுகின்றது. இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டமானது (PTA) மதம், வகுப்பு, சாதி என்ற அடிப்படையில் பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும். எவ்வாறாயினும், அதன் செயல்முறைரீதியான பயன்பாடு பிரச்சினைக்குரியதாகக் காணப்படுகின்றது. தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் சிறுபான்மை சமூகங்கள் மற்றும் அரசியல் எதிராளிகளை இலக்கு வைப்பதற்கு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை (PTA) தொடர்ச்சியாக பயன்படுத்தி உள்ளனர். இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் சிறுபான்மை குழுக்களுக்கு சொந்தமானவர்களாக காணப்படுகின்றனர். தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் அவர்களது எதிரிகளுக்கு எதிராக பழி வாங்குவதற்கு இச்சட்டத்தை தேர்ந்தெடுத்த வகையில் பயன்படுத்துகின்றன.

இப்பாரபட்சமான செயல்முறைகள் சட்டத்தில் காணப்படுகின்ற ஓட்டைகளின் காரணமாக சாத்தியமானதாக காணப்படுகின்றது என நீதிக்கான மையத்தின் தலைவரும் , சட்டத்தரணியுமான சஹ்பி இஸ்மாயிலினால் கூறப்பட்டது.

கூடுவதற்கான உரிமை, சுதந்திரமான முறையிலே நகருதல், அவர்களது அபிப்ராயங்களை வெளிப்படுத்துவதற்கான உரிமை உள்ளிட்ட பிரஜைகளின் உரிமைகளை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரத்தை வழங்குகின்றது என்பது மிகவும் கவலை தருகின்ற அம்சங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது எனக் குறிப்பிடுகின்ற அவர் தற்போதுள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தினை மாற்றுவதற்கு முனமொழியப்பட்டுள்ள சட்டம் தொடர்பில் தனது விமர்சனத்தையும் தெரிவித்தார்.

மேலும், ATA ஏற்கனவே சவால்மிக்கதாக இருக்கின்ற சூழ்நிலையை மேலும் அதிகரிக்கும் வகையில் போதுமான சான்று இன்றி சந்தேகநபர்களை தடுத்து வைப்பதற்கு உயர் பொலிஸ் உத்தியோகத்தர்களை அனுமதிக்கும். ஓர் அறியாத பிசாசை விட ஓர் அறிந்த பிசாசை நீங்கள் நம்ப முடியும் என சட்டத்தரணி சஹ்பி இஸ்மாயில் குறிப்பிட்டார்.

பயங்கரவாத செயல்கள் தொடர்பிலே குற்றஞ்சாட்டப்பட்ட மதரீதியாக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் என்ற வகையில் நீதியைப் பெறுவது கடினமானதாக காணப்படுகின்றது என சைக் வலியுறுத்துகின்றார். “ஒவ்வொரு சட்டமும் ஆவணத்திலே முழுமையானதாக காணப்படுகின்றது. ஆனால், உண்மை வேறுபட்டதாக காணப்படுகின்றது. அதற்கு மதத்தைச் சேர்க்கின்றனர், பின்னர் குறித்த சட்டம் அதன் நிழலை அதிகம் மாற்றுகின்றது. அது ஒரு முஸ்லிமாக இருந்தால், பின்னர், குறித்த நபர் பொலிஸாரினாலும் முகவராண்மையினாலும் வேறுபட்ட வகையில் கையாளப்படுகின்றார்.”

இந்தியாவில் அரசியல் மற்றும் சமூக உரிமை அதன் சிறுபான்மையினரை நோக்கி அதிகரித்தவகையில் விரோதமானதாகத் திரும்பிக் கொண்டிருக்கின்றது. 2019 ஆம் ஆண்டின் பிரஜை திருத்தச் சட்டம் முஸ்லிம்களை ஓரப்படுத்துவதாக பெரிதும் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரங்கள், கழக கும்பல் கொலைகள், பள்ளிவாசல்களின் இடிப்பு என்பன சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான வேண்டுமென்ற பகைமை உருவாக்கத்தின் குறிகாட்டிகளாக காணப்படுகின்றன.

“பயங்கரவாத தடைச் சட்டம் (POTA) ரத்துச்செய்யப்பட்ட பின்னர் சட்டவிரோத செயற்பாடுகள் தடைச் சட்டம் (UAPA) திருத்தம் செய்யப்பட்டது, ஆனால் அதுவும் அரசாங்கத்தை விமர்சனம் செய்பவர்களை இலக்கு வைத்து அரசியல் ரீதியாக ஊக்குவிக்கப்படும் வழக்குகள் உள்ளிட்டு தவறான முறையில் பயன்படுத்தப்படுகின்றது. சட்டவிரோத செயற்பாடுகள் தடைச் சட்டம் (UAPA) அதிகரித்த வகையில் கடுமையானதாக ஆகியுள்ளது. அத்துடன், அது மதரீதியான சிறுபான்மை இனத்தவர்கள், உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளர்கள், பிஜேபி தலைமையிலான ஆளும் கட்சி அரசாங்கத்தை அரசியல் ரீதியாக விமர்சனம் செய்பவர்கள் ஆகியோரை இலக்கு வைத்துப் பயன்படுத்தப்படுகின்றது.” கங்குலி மேலும்தெரிவிக்கின்றார்.

தேசத்தின் பாதுகாப்பு அதிகூடிய முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கின்றது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இந்தியாவின் பாதுகாப்பை இறுக்கமாக்கும் நோக்கில் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. அதன் தற்போதைய கட்டத்தில், குறித்த நாடு பாதுகாக்க வேண்டிய மக்களை அது அடக்கியாளுகின்றது. சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கின்ற சட்டம் அதன் தற்போதைய பயன்பாட்டில் தீர்வாக காணப்படவில்லை. இந்தியா TADA சட்டத்துக்கு எதிராக போராடி இருக்கின்றது, பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு (POTA) எதிராக போராடியது. சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (UAPA) மற்றும் எதிரே வருகின்ற சாகித்ய சட்டமூலம் என்பனவற்றுக்கு எதிராகவும் போராடப்பட வேண்டும்.

“இலங்கையில் தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் பயங்கரவாத சட்டத்தை ரத்து செய்வதற்கு உறுதிமொழி அளித்துள்ளன. ஆனால், பதிலாக, முன்மொழியப்பட்ட சட்டங்கள் பிழையான விதிகளை பிரதிபலிப்புச் செய்வதுடன் புதிய நிபந்தனைகளையும் அறிமுகம் செய்கின்றது. புதிய ATA சர்வதேச நியமங்களையும் பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தையும் திருப்தி செய்வதில்லை. இச்சட்டங்கள் எத்தகைய குற்றப்பொறுப்புமின்றி நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்கப்படுவதற்கு அனுமதிக்கின்றது, அத்துடன், இச்சட்டங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டும்” என மீனாக்சி கங்குலி குறிப்பிடுகின்றார்.

அத்துடன் மீனாட்சி கங்குலி போன்று ஒவ்வொருவரும் ஏதேனும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையாக இருப்பதற்கு குற்றமற்ற தன்மையின் அனுமானத்தினை வேண்டுகின்றனர்.

முகம்மது றிஸ்வான்(இலங்கை)
ஏ. மொஹமட் பாயிஸ் (இலங்கை)
பிரியால் ஷா (இந்தியா)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x