நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகள், கல்லூரிகள், கல்வி காரியாலயங்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, கல்வியமைச்சின் செயலாளர் நேற்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பாடசாலைகளின் கல்வி சாரா ஊழியர்கள் மேற்கொண்டு வரும் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாகவே, கல்வி அமைச்சினால் பாதுகாப்பு அமைச்சிடம் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதே வேளை,பாடசாலைகளின் கல்விசாரா ஊழியர்கள் நேற்றும் (24) இன்றும் (25) சுகவீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதற்கமைய பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில், பாடசாலைகளில் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் விசேட அறிவிப்பு ஒன்றும் நேற்றைய தினம் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில்,பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பாடசாலை சமூகத்துடன் இணைந்து பாடசாலைகளின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில், முறையான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாகாண கல்விச் செயலாளர்கள் மற்றும் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள், கல்லூரிகள், கல்வி காரியாலயங்கள், மாணவர் சமூகம் மற்றும் பௌதீக வளங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு கல்வியமைச்சினால் பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்