நம்மை இறைவாக்கினர்களாகவும், புதியதொரு உலகத்தை படைப்பவர்களாகவும் மாற்றும் நற்கருணைக்கு நன்றி கூறுவோம் எனதிருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.பிட்கப்பட்ட அப்பத்திலும், சீடர்களுக்குப் பருக கொடுக்கப்பட்ட கிண்ணத்திலும், மனிதகுலம் அனைத்திற்காகவும், இவ்வுலகின் நல்வாழ்விற்காகவும் தன்னையே வழங்குகிறார் இயேசு என்றும் அவர் தெரிவித்தார்.
இயேசுவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா சிறப்பிக்கப்பட்ட ஞாயிறு தினத்தில் வத்திக்கானின், புனித பேதுரு பெஸிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கி செப உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மிதமான மழைத்துளிகளின் நடுவே கரங்களில் குடைகளை ஏந்தி ஆர்வமுடன் காத்திருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரையைத் தொடங்கிய திருத்தந்தை, கடந்த ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் (மாற் 14:12-26) ‘அதை அவர்களுக்குக் கொடுத்தார்’ (வச. 22) என்ற இறைவார்த்தையை மையக்கருத்தாகக் கொண்டுகருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
நற்கருணை, உண்மையில், அருள்கொடையின் பரிமாணத்தை முதலில் நமக்கு நினைவுபடுத்துகிறது.
இயேசு அப்பத்தை கையில் எடுத்தது அவர் மட்டும் உண்பதற்காக அல்ல, மாறாக, அதைப் பிட்டு எல்லோருக்கும் பகிர்ந்துகொடுப்பதற்கே. அதன்வழியாக அவருடைய அடையாளத்தையும் திருப்பணியையும் நமக்கு வெளிப்படுத்துகிறார்.
இயேசு, தனது உயிரை தனக்குரியதாக மட்டுமே வைத்துக்கொள்ளாமல் அதை நமக்கும் வழங்கினார், கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் நாம் அனைவரும் நிலைவாழ்வைப் பெறும்பொருட்டு அவர் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார் (காண்க. பிலி 2:1-11)
அப்படியானால், நற்கருணையைக் கொண்டாடுவதும், அப்பத்தை உண்பதும், வாழ்க்கையிலிருந்து விலகிய வழிபாட்டுச் செயலோ அல்லது தனிப்பட்ட ஆறுதலுக்கான ஒரு தருணமோ அல்ல என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். இயேசு அப்பத்தை எடுத்து, அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை, அவருடன் ஒன்றித்திருப்பது என்பது, மற்றவர்களுக்காக நாம் பிட்கப்பட்ட அப்பமாக மாறவும், நம்மிடம் என்ன இருக்கிறதோ மற்றும் நாம் என்னவாக இருக்கிறோமோ அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் நமக்கு உதவுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ்