– ஹரக் கட்டாவின் மைத்துனர் என தெரிவிப்பு
துபாயில் வைத்து கைது செய்யப்பட்ட, திட்டமிட்ட குற்றக் கும்பலின் தலைவரும், சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புபட்ட கடத்தல்காரருமான 31 வயதான ‘மிதிகம ருவன்’ என அழைக்கப்படும் ருவன் சாமர, இன்று (31) அதிகாலை குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
‘மிதிகம ருவன்’ தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாளக் குழு தலைவராக கருதப்படும் திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவரான ‘ஹரக் கட்டா’ எனும் சந்தேகநபரின் மைத்துனர் எனத் தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு துபாயில் கிளப் ஒன்றில் நடந்த சண்டையில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரக் கட்டாவை CID தலைமையகத்திலிருந்து தப்பிக்க திட்டமிட்ட நபர் என அறியப்படும் மிதிகம ருவன், சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவித்தல் பட்டியலுக்குள் பெயரிடப்பட்டுள்ள ஒரு சந்தேகநபராவார்.
இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விசேட பொலிஸ் அதிகாரிகள் குழு கடந்த மே 28 ஆம் திகதி துபாய் சென்று, மிதிகம ருவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, இன்றையதினம் (31) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
இவர்கள் துபாயிலிருந்து இன்று (31) அதிகாலை 5.45 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் வெளியே அழைத்துச் செல்லப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.