ஹெலிகொப்டர் விபத்தொன்றில் அண்மையில் மரணமான ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்காக புத்தளத்தில் வாழுகின்ற மக்களும் தமது அனுதாபங்களை தெரிவித்தனர்.
முன்னாள் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஐ.இல்யாஸின் தலைமையில் புத்தளம் கலாசார அமைப்பு ஏற்பாடு செய்த அனுதாப கையொப்பங்களை பெறும் செயற்திட்டமொன்று வெள்ளிக்கிழமை (25) புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில் இடம்பெற்றது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம், புத்தளம் நகர சபை முன்னாள் உறுப்பினர் ஜமீனா இல்யாஸ், ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், உயர்பீட உறுப்பினருமான சப்வான் சல்மான், புத்தளம் தொகுதி அமைப்பாளர் எப்.எம்.றாபி, உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், உலமாக்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், இளைஞர், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டு தமது அனுதாப குறிப்பினை பதிவு செய்து கையொப்பங்களை பதிவிட்டனர்.
இவ்வாறு பெறப்படுகின்ற இந்த கையொப்பங்களை இலங்கையில் உள்ள ஈரான் தூதுவராலயத்தின் ஊடாக ஈரான் நாட்டின் பதில் ஜனாதியின் அலுவலகத்திற்கு பாரப்படுத்தப்பட உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்