Sunday, November 24, 2024
Home » IPL 2024: ஹர்ஷல் படேல் முதல் நடராஜன் வரை விக்கெட் வேட்டையில் முதல் 5 வீரர்கள்

IPL 2024: ஹர்ஷல் படேல் முதல் நடராஜன் வரை விக்கெட் வேட்டையில் முதல் 5 வீரர்கள்

by Prashahini
May 28, 2024 10:36 am 0 comment

நடந்து முடிந்த IPL 2024 தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுக்கான Purple தொப்பியை வென்றுள்ளார் ஹர்ஷல் படேல்.IPL T20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இந்த சீசனில் பந்துவீச்சாளர்களும் திறம்பட செயல்பட்டனர். அதன்படி, இந்த தொடரில் விக்கெட் வேட்டை நடத்திய வீரர்களில் முதலிடத்தில் ஹர்ஷல் படேல் உள்ளார்.

விக்கெட் வேட்டையில் முதல் 5 வீரர்கள்:

ஹர்ஷல் படேல்:  இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுக்கான Purple நிற தொப்பியை வென்றுள்ளார் ஹர்ஷல் படேல். இந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஹர்ஷல், வழக்கம் போல் தனது ஸ்லோயர் பந்துகளை வீசி துடுப்பாட்ட வீரர்களை வெளியேற்றினார். 14 போட்டிகளில் 24 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். சராசரி 19.87, எகனாமி 9.73. சிறந்த பந்துவீச்சு 3/15.

ஹர்ஷல் படேல் Purple நிற தொப்பியை வெல்வது இது இரண்டாவது முறை. முன்னதாக, 2021 சீசனில் 32 விக்கெட்களை வீழ்த்தி Purple நிற தொப்பியை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருண் சக்கரவர்த்தி:  நடப்பு சீசனில் 15 போட்டிகளில் 21 விக்கெட் வீழ்த்தியுள்ளார் வருண் சக்கரவர்த்தி. நடு ஓவர்களில் ஓட்ட குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தும் துருப்பு சீட்டாக கொல்கத்தா அணிக்கு விளங்கிய இவரின் சராசரி 19.14, எகனாமி 8.04, சிறந்த பந்துவீச்சு 3/16. சுனில் நரேனுடன் சேர்ந்து துடுப்பாட்ட வீரர்களை ஓட்டங்கள் குவிக்கவிடாமல் தடுத்த இவரின் ஸ்லோயர் பந்துகள் கொல்கத்தா மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் அளவுக்கு கொண்டு சென்றது.

ஜஸ்ப்ரீத் பும்ரா: மும்பை இந்தியன்ஸ் அணியில் நடப்பு சீசனின் ஒரே ஆறுதல் பும்ரா மட்டுமே. அந்த அணியில் இருந்து முதல் 15க்குள் இடம்பெற்ற ஒரே வீரரும் பும்ராவே. ஒரு ஐந்து விக்கெட் ஹாலுடன் 13 போட்டிகளில் 20 விக்கெட் வீழ்த்தி அசத்தல் பார்மை இந்த சீசனில் வெளிப்படுத்தி முதல் 3 பந்துவீச்சாளருக்குள் இடம்பிடித்துள்ளார் பும்ரா. அவரின் சராசரி 16.80, எகனாமி 6.48, சிறந்த பந்துவீச்சு 5/21. இந்திய அணி T20 உலகக் கோப்பை தொடருக்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், பும்ராவின் இந்த அசத்தல் பார்ம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

நடராஜன்:  ‘யார்க்கர்’ நட்டு என்று செல்லமாக அழைக்கப்படும் நடராஜன் வழக்கம் போல் இந்த சீசனிலும் தனது சிக்கன பந்துவீச்சால் எதிரணி ஓட்டங்கள் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தி தனது அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றதில் முக்கிய பங்கு வகித்தார். இந்த சீசனில் சிறந்த பந்துவீச்சாக 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மொத்தமாக 14 போட்டிகளில் 19 விக்கெட் வீழ்த்திய அவரின் சராசரி 24.47, எகனாமி 9.05 ஆகும்.

ஹர்ஷித் ராணா: கொல்கத்தா அணியின் லேட்டஸ்ட் வரவு இந்த ஹர்ஷித் ராணா. இவரின் பற்துவீச்சிற்கு சிறந்த சாட்சி இறுதிப்போட்டி. IPL இறுதியில் ஒரு மெய்டன் ஓவருடன் 2 விக்கெட் என்பது சிறந்த பந்துவீச்சு. அவரின் அசத்தல் பந்துவீச்சால் சன்ரைசர்ஸ் விக்கெட்களை பறிகொடுத்து தோல்வியை தேடியது. நடப்பு சீசனில் 15 போட்டிகளில் 19 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அவரின் சராசரி 20.15, எகனாமி 9.05, சிறந்த பந்துவீச்சு 3/24.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT