காஷ்மீரில் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்கும் பஹல்காமுக்கு வருகை தரும் உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ளதாக பஹல்காம் அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் தாரிக் ஹுசைன் நாய்க் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு மாத காலப் பகுதியில் மூன்று இலட்சம் உல்லாசப் பயணிகள் இங்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் 7 ஆயிரம் பேர் வெளிநாட்டினர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பஹல்காம் சுற்றுலா சீசன் (பருவகாலம்) ஆரம்பமாகியுள்ளதால் இங்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதனால் இங்குள்ள அனைத்து உல்லாச ஹோட்டல்களும் தங்குமிட வசதி அளிக்கும் விடுதிகளும் அடுத்த மாதத்திற்கும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. பஹல்காமுக்கு உல்லாசப் பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, இங்குள்ள கடைக்காரர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் உட்பட உல்லாசப் பயணிகளுக்கு சேவை வழங்குனர் அனைவர் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பஹல்காம் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.