ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதை, சவாலுக்குட்படுத்தி கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தாக்கல் செய்த மனுவின் தடையுத்தரவை, விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
இவரின் நியமனத்துக்கு கடுவெல மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனால், இவ்வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாதென அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆட்சேபனை வெளியிட்டுள்ளார்.
இச்சந்தர்ப்பத்தில் மனுதாரர் சார்பில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சந்தன ஜயசுந்தர, கடுவலை மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவு இந்நீதிமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இருதரப்பினரதும் விடயங்களை கவனத்திற் கொண்ட கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்துன் விதான, கடுவலை நீதிமன்ற உத்தரவிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இவ்வழக்கின் முறைப்பாட்டாளரால் கோரப்பட்டுள்ள தடையுத்தரவை பரிசீலிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)