மலையக பெருந்தோட்ட மக்களுக்கு நல்லது நடக்குமாயின் நாம் அதற்கு முழுமையான ஆதரவு வழங்கத் தயாராக உள்ளோம் என மனோ கணேசன் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எனினும், மலையக பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளன என்பதை முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற காப்பு,அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குப்படுத்தல்),( திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் எம்பி இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களைக் கொண்டு எமது மக்களின் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன.பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.
பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் சபையில் தெரிவிக்கப்படும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்தேன். அவை கற்பனைக் கதைகள் என நான் குறிப்பிடவில்லை. எமது மக்களுக்கு நல்லது நடக்குமாயின் நாம் அதனை எதிர்க்கப் போவதில்லை. முழுமையாக அதற்கு ஆதரவு வழங்குவோம்.
லோரன்ஸ் செல்வநாயகம்