கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வீசா வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிறுவனத்துக்கும், இந்தியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லையென இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வீசா வழங்கும் நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துவரும் நிறுவனங்கள், இந்தியாவை சேர்ந்தவை அல்ல. இந்தியாவை தளமாக கொண்டவையும் அல்ல என்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரலாய பேச்சாளர் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வீசா வழங்கும் நடவடிக்கைகளை இந்திய நிறுவனம் பொறுப்பேற்றுள்ளதா? என்ற தலைப்பில் ஊடகங்கள் வெளியிட்டுள்ள கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் வீசா வழங்கும் நடவடிக்கைகளை, இந்திய நிறுவனம் பொறுப்பேற்றுள்ளதென பதிவுகளும் கருத்துக்களும் வெளியாகியுள்ளதை அவதானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் இந்தியாவை சேர்ந்தவையோ அல்லது இந்தியாவை தளமாக கொண்டவையோ, அந்நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் இந்தியாவிலோ இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இவ்விடயத்தில் இந்தியாவை குறிப்பிடுவது தேவையற்றதெனவும் உயர் ஸ்தானிகராலய பேச்சாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.