அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (ஏபிசி) தெற்காசிய நிருபர் அவானி டயஸ், தேர்தல் தொடர்பான செய்திகளை சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை எனவும் நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டார் எனவும் வெளியிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை எனவும் நகைப்பிற்குரியதும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டயஸ் தனது தொழில்முறை நடவடிக்கைகளில் ஈடுபடும் போது வீசா விதிகளை மீறியதாகக் கண்டறியப்பட்டது. இருந்தபோதிலும், அவரது கோரிக்கையின் பேரில், பொதுத் தேர்தலின் போது செய்தி சேகரிப்பதற்காக அவரது வீசா காலம் நீட்டிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதாக இந்திய வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது முந்தைய வீசா 2024 ஏப்ரல் 20 வரை செல்லுபடியானதாக இருந்தது.
“அவர் ஏப்ரல் 18 ஆம் திகதி வீசா கட்டணத்தை செலுத்தினார். அதே நாளில் அவரது வீசா ஜூன் இறுதி வரை நீட்டிக்கப்பட்டது. எவ்வாறாயினும், அவர் ஏப்ரல் 20 ஆம் திகதி இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தார். அவர் புறப்படும் நேரத்தில், செல்லுபடியாகும் வீசாவை வைத்திருந்தார், மேலும் அவரது வீசா நீட்டிப்பு அங்கீகரிக்கப்பட்டது” என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலை தொடர்பான செய்திகளை திரட்ட அனுமதி வழங்கப்படவில்லை என்ற அவரது கருத்து உண்மையில் தவறானது. வாக்குச்சாவடிகளுக்கு வெளியே தேர்தல் நடவடிக்கைகளின் செய்தி திரட்ட வீசா வைத்திருக்கும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது .
வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்குச் செல்ல மட்டுமே அனுமதிக் கடிதங்கள் தேவை. எவ்வாறாயினும், வீசா நீடிப்பு நடைமுறையில் இருக்கும் போது இதை செயல்படுத்த முடியாது. ஏனைய ஏபிசி நிருபர்களான மேக்னா பாலி மற்றும் சோம் படிதர் ஆகியோருக்கு ஏற்கனவே அனுமதிக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“சீக்கியர்கள், கொலையாளிகள் மற்றும் உளவாளிகள்” என்ற தலைப்பில் மார்ச் 21 ஆம் திகதி ஏபிசி வெளியிட்ட ஆவணப்படம் உரிய அனுமதியின்றி படமாக்கப்பட்டது” என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
தனது வீசா நீடிப்பு மறுக்கப்படும் என்று அரசாங்கம் தன்னிடம் கூறியதால், “திடீரென்று” இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியிருந்ததாக டயஸ் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.