– அவுஸ்திரேலிய எல்லைப் படை மற்றும் இலங்கை கடலோரக் காவல்படை திணைக்களம் இணைந்த கூட்டு அறிக்கை
நேற்றையதினம் (22) கொழும்பில் புதிய கூட்டு கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கையை ஆரம்பித்ததன் மூலம், கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
‘Keeping a watchful eye over the maritime environment’ (கடல் சூழலைக் கண்காணித்தல்) எனப் பொருள்படும் ‘Disi Rela’ என இந்நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டுள்ளது. இப்புதிய கூட்டு நடவடிக்கையில், அவுஸ்திரேலிய எல்லைப் படையும் (ABF) இலங்கை கடலோர காவல்படை திணைக்களமும் (SLCG) திக்கோவிட்டாவில் இருந்து சிலாபம் வரை ஒரு வார கால வேலைத்திட்டத்தை மேற்கொள்ளும்.
இதன் அறிமுக நிகழ்வில் இத்திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்திய Joint Agency Task Force Operation Sovereign Borders (சுயாதிபத்திய எல்லைகள் நடவடிக்கைக்கான கூட்டு முகவர் நிறுவன) கொமாண்டர் ரியர் அட்மிரல் Brett Sonter, (Royal Australian Navy) தெரிவிக்கையில் “Disi Rela நடவடிக்கையானது, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையை கோடிட்டுக் காட்டுகிறது” என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “அவுஸ்திரேலியா – இலங்கை உறவை தங்க தர நிலைக்கு (Gold Standard) நாம் ஒப்பிடுகிறோம். Disi Rela திட்டம் தொடர்பான இன்றைய அறிவிப்பானது, அதை பிளாட்டினம் நிலைக்கு கொண்டு செல்கிறது. இந்த திட்டமானது, கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது தொடர்பாக இரு நாடுகளுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தும் என நான் எதிர்பார்க்கிறேன்.” என்றார்.
ஆட்கடத்தல், மனித கடத்தல் உட்பட ஏனைய கடல்சார் குற்ற வகைகள் பற்றிய சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட, அவுஸ்திரேலிய எல்லைப் படை (ABF) மற்றும் இலங்கை கடலோர காவல்படை (SLCG) இடையே செயற்பாட்டு திறன்கள் மற்றும் தகவல்களைப் பகிர்வதை Disi Rela திட்டம் உள்ளடக்கியுள்ளது.
இலங்கை கடலோரக் காவல்படை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் பூஜித விதான இங்கு கருத்துத் தெரிவிக்கையில், “கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து வலுவான சமூக விழிப்புணர்வை உருவாக்குவதற்கான ஒரு தளத்தை Disi Rela வழங்குகிறது.” என்றார்.
“Disi Rela எனும் பெயரின் அர்த்தம் குறிப்பிடுவது போன்று, எமது கடல்சார் பிராந்திய சூழலைக் கண்காணிப்பது அனைவரின் பொறுப்பாகும். வேறு வகையில் கூறுவதானால், அனைத்து மட்டத்திலும் உள்ள இலங்கையர்களுக்கும் இதில் முக்கிய பங்கு உள்ளது.” என ரியர் அட்மிரல் பூஜித விதான தெரிவித்தார்.
சந்தேகத்திற்கிடமான அல்லது சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகள் குறித்து 041 750 1400 எனும் பிரத்தியேக உடனடி தொலைபேசி அழைப்பு மூலம் 24 மணிநேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் முறைப்பாடு செய்யலாம்.
ரியர் அட்மிரல் Brett Sonter இங்கு மேலும் குறிப்பிடுகையில் “இரு நாடுகளுக்கிடையே காணப்படும் சவால்களை எதிர்கொள்வதற்கும் எமக்கு உரித்தான இலக்குகளை அடைவதற்கும் நாம் ஒன்றிணைந்து செயற்படுவதற்காக இலங்கை கடலோரக் காவல்படையுடன் இணைந்து பணியாற்றுவதில் நாம் பெருமை கொள்கிறோம். அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது என்பதற்கு Disi Rela திட்டம் ஒரு சான்றாகும்” என்றார்.