– மது, பாதுகாப்பற்ற வாகன செலுத்துகையே காரணம்
புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்பொடை, கட்டுகித்துல பிரதேசத்தில் நேற்று (14) மாலை 3.40 மணியலவில் இடம்பெற்ற வேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.
கதிரமுல்ல மற்றும் ரிதிகம பிரதேசங்களில் இருந்து வேன் ஒன்றில் பயணித்தவர்களே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியிருந்தனர்.
நுவரெலியா ஏப்ரல் வசந்தகால நிகழ்வுகளுக்கு வருகை தந்து பின் ரிதிகம பிரதேசத்தை நோக்கி பயணித்த குறித்த வேன், புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகித்துல பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் குறித்த வேன் புரண்டு வீழ்ந்து விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் இடம்பெற்ற வேளையில் விபத்துக்கு உள்ளான வேனில் பெண்கள் இருவர், 2 வயது குழந்தை ஒன்று, வேன் உரிமையாளர் என மேலும் மூன்று ஆண்களுடன் ஏழு பேர் பயணித்துள்ளனர்.
இவர்களில் மொஹமட் அனிஸ் ஆதில் என்ற 2 வயதான குழந்தை மற்றும் எஸ்.எல்.எம். அமீர்தீன் ஆகியோர் விபத்து சம்பவித்த இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
ஏனைய ஐவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர்கள் புஸ்ஸலாவை வவுக்பிட்டிய பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் மொஹமது பீவி (60) எனும் பெண் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (14) உயிரிழந்துள்ளார்.
அதேநேரத்தில் சம்பவத்தில் உயிரிழந்த 2 வயது குழந்தையின் தாயான ரிப்னா (30) குழந்தையின் தந்தை உட்பட வேன் உரிமையாளர் மற்றும் மேலும் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் புஸ்ஸலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பண்டிகைக் வேளையில் நாட்டில் இடம்பெற்ற 8 விபத்துகளில் இதுவரை 10 பேர் மரணித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த விபத்துகளில் 10 பேர் பலத்த காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விபத்துகள், மதுபோதை, பாதுகாப்பற்ற வாகன செலுத்துகையே போன்றவற்றால் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, வீதிகளில் அசமந்தமான வாகன செலுத்துகை, போதையில் வாகனத்தை செலுத்துவது உள்ளிட்ட விடயங்களை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.