இறம்பொடை – கொழும்பு பிரதான வீதியில் எல்பொடைக்கும், புஸ்ஸல்லாவக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று (14) பிற்பகல் வேன் ஒன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து பாரிய விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவத்தில் ரிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வேனில் பயணித்த ஏழு பேரில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.
ரிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த 2 1/2 வயது ஆண் குழந்தை மற்றும் அதன் 65 வயது பாட்டனார் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரத்தில் குறித்த வேனில் பயணித்த 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் ஆகிய 5 பேர் வகுகபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயங்களுக்குள்ளானவர்கள் கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு ஏப்ரல் வசந்தகால நிகழ்வுகளை பார்வையிட வந்த இஸ்லாமிய குடும்பத்தினர் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தில் விபத்துக்குள்ளான வேன் நுவரெலியாவுக்கு சாரதி உள்ளிட்ட 7 பேருடன் சுற்றுலாவுக்கு வருகைதந்து பின் குருணாகல் நோக்கி பயணிக்கையில் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இச்சம்பவத்தில் விபத்துக்கு உள்ளான வேனில் சிறு குழந்தை, வயதானவர்களும் கூட இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் விபத்தில் வேனில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் பிரதேச மக்கள், பொலிஸார் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆ.ரமேஸ்