முழு சூரிய கிரகணத்தை, அமெரிக்கா, கனடா, மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் பல கோடி மக்கள் நேற்று (08) கண்டுகளித்தனர்.
இந்தச் சூரிய கிரகணத்தில், நிலவு சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வந்து, அதன் ஒளியை முழுவதும் மறைத்தது.
இந்தக் கிரகணத்தின் பாதை, வட அமெரிக்கக் கண்டம் முழுதும் அமைந்தது. மேற்கே மெக்சிகோவின் கடற்கரையிலிருந்து, கிழக்கே நயாகரா நீர்வீழ்ச்சி வரை இந்தக் கிரகணம் கடந்து சென்றது.
இது முதன்முதலில் மெக்சிகோவின் மசாட்லான் நகரத்துக்கு அருகில், இந்திய நேரப்படி இரவு சுமார் 11.40 மணிக்குத் தென்பட்டது. வட அமெரிக்க கண்டத்தை தென்மேற்கிலிருந்து வடகிழக்கு வரை கடந்த முழு கிரகணம், இறுதியாகத் தென்பட்டது கனடாவின் கிழக்குக் கடற்கரையான நியூஃபவுண்ட்லேண்டின் ஃபோகோ தீவில்.
கிரகணம் தென்பட்ட மூன்று நாடுகளிலும் பல மக்கள் பொது வெளிகளில் கூடி, ஆரவாரத்துடன் அதனைக் கண்டுகளித்தனர்.
முதலில் நிலாவின் விளிம்பு சூரியனைத் தொடுவதுபோலத் தோன்றியது. தொடர்ந்து நிலா சூரியனை முழுவதுமாக மறைத்தது. கிரகணத்தின் உச்சத்தில், முழுவதும் இருள் சூழ்ந்தது. நிலாவின் விளிம்பைச் சுற்றியும் சூரியனின் ஒளிவட்டம் மட்டுமே தென்பட்டது.
கிரகணத்தின்போது வெப்பநிலை திடீரெனச் சரிந்தது. எங்கும் நிசப்தம் சூழ்ந்தது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரத்தில் தனது தந்தையுடன் கிரகணத்தைக் கண்ட மாணவியான ஏடி, கிரகணத்தின்போது எங்கும் கும்மிருட்டு சூழ்ந்ததாகக் கூறினார். “மீண்டும் வெளிச்சம் வந்தபோதுதான் வெட்டுக்கிளிகள், பறவைகள் ஆகியவை சத்தம்போடத் துவங்கின,” என்றார் அவர்.
வானியல் ஆர்வலரான டார்சி ஹோவர்ட், கிரகணத்தைக் காண்பதற்காக மத்திய ஆர்கன்சாஸில் உள்ள தனது வீட்டிலிருந்து மிசௌரி நகரத்திற்கு வந்திருந்தார். மோசமான வானிலை காரணமாக தான் கிரகணத்தைப் பார்ப்பது தடைபடக்கூடாது என்பதற்காக அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டார்.
மிசௌரொயின் உள்ளூர் நேரப்படி மதியம் சுமார் 2.00 மணிக்கு முழு கிரகணம் நிகழ்ந்தது. அப்போது ஒரு ‘வினோதமான இருள்’ சூழ்ந்ததாக ஹோவர்ட் கூறினார். “வேறு ஏதோ உலகில் இருப்பதுபோன்ற உணர்வு எழுந்தது,” என்று அவர் கூறினார்.
அமெரிக்காவில் பலரும் இந்தக் கிரகணத்தைத் தங்கள் வாழ்க்கையின் முக்கியமான நாளாக மாற்றிக்கொள்ள விரும்பினர். முழு கிரகணம் நிகழும்போது திருமணம் செய்துகொண்டனர். அர்கான்ஸாஸ் மாகாணத்தில் அமெரிக்கா முழுதும் இருந்து வந்திருந்த 300 ஜோடிகள் முழு கிரகணம் நிகழ்ந்த தருணத்தில் திருமணம் செய்து கொண்டனர்.