அருகி வருகின்ற நீர்வளத்தைப் பாதுகாத்து, நீர்ப்பற்றாக்குறைப் பிரச்சினையை தீர்ப்பது இன்றியமையாததாகும். அதுமாத்திரமன்றி, நீர்வளப் பாதுகாப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியமாகும்.
நீரின்றி அமையாதது உலகு. நீர்வளங்கள் மிக விரைவாக அருகிச் செல்கின்றன. சூழல் பிரச்சினைகளில் முன்னோடியாகத் திகழ்வது நீர்ப்பற்றாக்குறை ஆகும்.
1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதன் முதலாக உலக நீர்தினம் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் இன்று வரைக்கும் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி உலகெங்கிலும் நீர்தினம் ஒவ்வொரு கருப்பொருளை வலியுறுத்திக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
எமது அன்றாட நடவடிக்கைகளின் போது எண்ணெய், பூச்சிகொல்லிகள், உரங்கள் மற்றும் வண்டல்
மண் ஆகியவை நீரூடகங்களை எப்படியோ சென்றடைந்து விடுகின்றன. எமது நீர்வளங்களைச் சுத்தமாக வைத்திருப்பதையும் மற்றும் நாம் சுற்றுப்புறத்தில் போதியளவு நீர் இருப்பதை உறுதி செய்வதையும் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.
அதாவது எமது வீட்டைச் சுற்றியுள்ள நீர்வளங்களை மாசுக்களிலிருந்து பாதுகாத்தல் வேண்டும். எமது பூமிக்கிரகத்தில் ஓருபோதும் முற்றாக நீர் இன்றிப் போகாது. எனினும் சுத்தமான நன்னீர் எப்போதும் மனிதர்களுக்குத் தேவைப்படும் இடத்தில் எப்போதும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளல் வேண்டும்.
இருபதாம் நூற்றாண்டைக் கடந்துவிட்ட நாம் இன்றும் அழுத்தமான உலகளாவிய பிரச்சினைகளில் ஒன்றாகிய ‘நீரினை அணுகும் வழி’ என்பதிலிருந்து மீளமுடியாமல் இருக்கின்றோம்.
உலக சனத்தொகை பெருகும்போது அதற்கேற்ப நீரின் தேவையும் வெகுவாக அதிகரிக்கும். அதேநேரத்தில் காலநிலை மாற்றம், வலுப்பற்றாக்குறை, நிலப்பயன்பாடுத் தீர்மானங்கள், கனியவளங்களின் தொழிற்பாடுகள், தொழிற்சாலைகளின் தேவைப்பாடுகள் ஆகியனவற்றால் நீரின் கிடைக்கக்கூடிய தன்மை மற்றும் நீரின் தரம் என்பன மிகவும் சவாலாக உள்ளன. எமது தற்போதைய நீர்ப்பயன்பாட்டைச் சமாளிப்பதற்கும் அதை எதிர்காலத்துக்காகக் கட்டமைப்பதற்கும் சிறந்த வழிகளைக் கண்டறிய வேண்டும். இதனால் பெருகி வரும் சனத்தொகைக்கு சேவை செய்ய முடியும். மேலும் எதிர்கால சந்ததியினருக்காக இருப்புக்களைப் பாதுகாக்க முடியும்.
நீர் எமது ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. உயிரணுக்களுக்கு ஊட்டச் சத்துக்களை கொண்டு செல்வது, கழிவுகளை வெளியேற்றுவது, மூட்டுக்கள் மற்றும் உறுப்புக்களைப் பாதுகாப்பது, உடல்வெப்பநிலையைப் பேணுவது உள்ளிட்ட எமது உடலின் பல செயற்பாடுகளில் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது.மனித குலத்திற்கும் பூமிக்கிரகத்தின் எதிர்காலத்திற்கும் நீர் ஒரு முக்கிய இயற்கை வளம் ஆகும். நீர் எமது மிகப்பெரிய இயற்கை வளம் ஆகும்.
உலகில் நால்வருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. இது ஒரு சுகாதாரப் பேராபத்து ஆகும். ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதுகாப்பற்ற நீரினால் இறக்கின்றனர்.
மனிதத் தேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்ற உலகின் அனைத்து நன்னீர்களின் 70 சதவீதமானவை பாசன விவசாயத்திற்குப் பயன்படுகின்றன.
குடிநீர், விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நீர் மிகவும் அவசியம் ஆகும். அதேவேளை போக்குவரத்து, வெப்பமாக்கல், மற்றும் மின்னுற்பத்திக்கு நீரின் வலு அவசியமாகின்றது. அனைத்து தொழிலாளர்களில் அண்ணளவாக ஐம்பது சதவீதமானோர் நீர் தொடர்பான துறைகளில் தொழில் புரிபவர்கள் ஆவர். அத்துடன் அவை யாவும் தண்ணீர் கிடைப்பதைப் பொறுத்தே அமைகின்றன.
உண்மையில், சமூகத்தால் உற்பத்தி செய்யப்படுகின்ற பெரும்பாலான கழிவு நீரானது தொழிற்சாலைகள், விவசாயம் மற்றும் நகராட்சிகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. இவை சுத்திகரிக்கப்படாமலே மீண்டும் சுற்றுச்சூழல் அமைப்பில் சேருகின்றது.
நீர் நெருக்கடிக்கு பிரதான ஏதுவாய் விளங்குவது காலநிலை மாற்றம். கடும் வெள்ளம், கடல் மட்டம் உயர்தல், பனி நிலச்சுருக்கம், காட்டுத் தீ மற்றும் வரட்சி என்பவற்றின் மூலம் காலநிலை மாற்றத்தில் தாக்கங்களை நாம் உணர்கின்றோம். நிலத்தடி நீர் உலகளவில் சுமார் ஐம்பது சதவீத குடிநீரை வழங்குகின்றது. நாற்பது சதவீதமான நீர் நீர்ப்பாசனத்திற்கு பயன்படுகின்ற அதேவேளை மூன்றில் ஒரு பங்கு தொழிற்சாலைக்குப் பயன்படுகிறது. சுற்றுச் சூழலைத் தக்கவைப்பது மட்டுமல்லாமல் காலநிலை மாற்றத்திற்கு ஈடு கொடுக்கவும் நிலத்தடி நீர் அவசியமாகின்றது.
உலகளவில் மூன்று மில்லியனுக்கும் அதிகளவிலான மக்கள் சொந்த நாட்டின் எல்லைகளைக் கடக்கும் நீரை நம்பியுள்ளனர். எனினும், 24 நாடுகள் மட்டுமே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளன. காலநிலை மாற்றம் மற்றும் பெருகிவரும் சனத்தொகை என்பவற்றைச் சமாளிக்க நீர்வள நிலையப் பாதுகாப்பிற்கும் பேணுவதற்கும் நாடுகளுக்கிடையான அவசரத் தேவைகள் உள்ளன. பொதுச்சுகாதாரம் மற்றும் செழிப்பு, உணவு மற்றும் சக்தி அமைப்புக்கள், பொருளாதார உற்பத்தி மற்றும் சுற்றுச் சூழல் ஒருமைப்பாடு ஆகியவை நன்கு செயற்படுகின்றதும் சமத்துவ முகாமைத்துவம் மிக்கதுமான நீர்ச் சுழற்சியில் தங்கியுள்ளன. நனசர்வதேச வலைப் பின்னல், அதாவது World Wide Web எனும் சொற்றொடரை மற்றும் www எனும் பதத்தை அறியாதவர்கள் உலகில் எவரும் இல்லை. மீண்டும் அதே பதம் www வேறு உள்ளடக்கம் கொண்டு வெளிவரக் காத்திருக்கிறது. அதாவது World Water War (உலக நீர் யுத்தம்) என்பதுதான். அப்படியொரு www உருவாகாமல் நீர் தொடர்பான சகல நடவடிக்கைகளில் ஈடுபடுவது இந்த நீரேந்தும் பூமிக்கிரகத்தில் நீரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு உயிரினத்தினதும் தவிர்க்க முடியாத தார்மீகப் பொறுப்பு ஆகும்.
எஸ்.கஸ்ஸாலி
மூதூர் தினகரன் நிருபர்