இன்று நாம் சகோதரத்துவத்துடன் வாழ்வதற்காக 2015 ஆம் ஆண்டு தமிழில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று தீர்மானித்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என, அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
ஸ்மார்ட் யூத் கிளப்’ இளம் தொழில் வல்லுனர்களை ஊக்குவிக்கும் வகையில் ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின் எட்டாம் கட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் வவுனியா காமினி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (30) அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் தமிழ் மொழி பேசும் அனைத்து மக்களுக்கும் கௌரவம் அளிக்கும் வகையில் சுமார் 9 வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழில் தேசிய கீதம் பாடும் வாய்ப்பை ஏற்படுத்தியதாக அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது:
இன்று எம்மத்தியில் காணப்படும் சகோதரத்துவ உறவுக்காக 09 வருடங்களுக்கு முன்னர் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தீர்மானம் எடுத்தார்.
அரசியல் சோசலிசம், தாராளமயம், பாசிசம் மற்றும் இனவாதம் பற்றிய பல விஷயங்கள் நமக்காக உருவாக்கப்பட்டுள்ளன. இனவாதம் பற்றி எங்களுக்கு நிறைய தெரியும். 1948இல் வெள்ளையர்கள் சுதந்திரத்தை வழங்குவதற்கு முன்னர் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற பாகுபாடு இருக்கவில்லை.
நாங்கள் தமிழர், முஸ்லிம்கள் என்று பிரிக்கவில்லை. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு வடக்கு தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு வாக்குகளைப் பெற இனவாதம் விதைக்கப்பட்டது.
அந்த இனவாதம் எவ்வளவு தூரம் சென்றது என்றால் பிள்ளைகள் படிக்க வேண்டிய யாழ் நூலகம் எரிக்கப்பட்ட இடத்திலிருந்து தென்னிலங்கையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு வரை வெகுதூரம் சென்றது.
இவை யாரோ ஒருவரின் தேவைக்காக உருவாக்கப்பட்ட கருத்துக்கள். வாகனங்களில் இருந்த ‘ஸ்ரீ’ என்ற எழுத்து துடைக்கப்பட்டு சாணம் பூசப்பட்டது. முஸ்லீம் கடையில் துணி வாங்கினால், கொத்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்றார்கள்.
இவற்றை எல்லாம் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தங்கள் மூலம் தீர்க்க முயன்றபோது இனவாதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இன்று எமது இளைஞர், யுவதிகளுக்கான தொழிற்படையைக் கட்டியெழுப்புவதற்கும் பயிற்சிகளை வழங்குவதற்கும் ஜனாதிபதி ஒன்றரை பில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கி உள்ளார்.
எனவே இதன் மூலம் தொழிற்பாயிற்ச்சிகளை பெற்று சிறந்த தொழில்வாய்ப்புகளை உலகளாவிய ரீதியில் பெறவேண்டும்.
அதன் மூலம் கிடைக்கும் வருமானம் நாட்டிற்கு வரும்போது பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்று அமைச்சர் கூறினார்.